Crime: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கூலித்தொழிலாளி கழுத்தை நெரித்து கொலை
திருச்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கூலித்தொழிலாளி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மனைவியின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் , சிறுகனூர் அருகே உள்ள ஊட்டத்தூர் மொட்டையன் காலனியை சேர்ந்தவர் மணி (வயது 32). இவரது மனைவி கோவிந்தம்மாள். இந்த தம்பதிக்கு ரஞ்சித் (12), நித்தீஷ் (8) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அதே ஊரில் உள்ள பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (43). இவர் கல் உடைக்கும் கம்ப்ரசர் எந்திரம் வைத்துள்ளார். இவரிடம் மணி கூலி வேலை செய்து வந்தார். மணிக்கு குடிப்பழக்கம் இருந்ததால், அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த தகராறை சிவக்குமார் விலக்கி வந்துள்ளார். இந்நிலையில், சிவக்குமாருக்கும், கோவிந்தம்மாளுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை அறிந்த மணி இருவரையும் கண்டித்தார். இதைத்தொடர்ந்து மணி உயிருடன் இருந்தால் கோவிந்தம்மாளுடன் கள்ளத்தொடர்பில் இருக்க முடியாது என எண்ணிய சிவக்குமார் நேற்று முன்தினம் மணியை தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். பின்னர் இருவரும் வீட்டில் இருந்து மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சிவக்குமார் மணியின் கழுத்தை நைலான் கயிற்றால் இறுக்கியதாக தெரிகிறது. இதில் மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து சிவக்குமார், மணி அதிக அளவில் மது குடித்ததால் போதையில் இருப்பதாக கூறி தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு மணியை அவருடைய வீட்டில் கொண்டு போய் விட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நீண்ட நேரம் ஆகியும் மணி எழுந்திருக்காததால் சந்தேகம் அடைந்த கோவிந்தம்மாள் அவருடைய உறவினர்களை அழைத்துக்கொண்டு பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் மணி கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் பேரில் சிவக்குமாரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் மணியை நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்