Crime: தனியாக வீட்டில் இருந்த முதிய தம்பதியை தாக்கி கத்தி முனையில் நகை, பணம் கொள்ளை
கீழ்பென்னாத்தூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த தம்பதியினரை தாக்கிய கொள்ளை கும்பல், 10 சவரன் தங்க நகை, 70 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் ரைஸ்மில் வைத்து தொழில் நடத்தி வருபவர் வெங்கடாஜலபதி வயது (55). இவருடைய மனைவி பிருந்தா வயது (50). நேற்று இரவு வழக்கம்போல் ரைஸ் மில்லை வெங்கடாஜலபதி மூடிவிட்டு ரைஸ் மில்லுக்கு பின்புறம் உள்ள தனது வீட்டில் கதவுகளை மூடிக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு வீட்டின் முன் பக்கம் உள்ள கடையில் சத்தம் வருவதை அறிந்த வெங்கடாஜலபதி உடனடியாக வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளார். அப்பொழுது முகமூடி மற்றும் மங்கி குள்ளா அணிந்து இருந்த மூன்று நபர்கள், கடையினை உடைத்து அதில் இருந்த ரூபாயை கொள்ளையடிக்க முயற்சி செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது வெளியில் வந்த வெங்கடாஜலபதியை பார்த்த கொள்ளையர்கள் விரைவாக சென்று அவரஒ பிடித்து அவரின் கழுத்தில் கத்தியை வைத்துள்ளனர்.
‘நீ கத்தினாள் உன்னை கொன்று விடுவோம்’ என்று கொள்ளையர்கள் கூறியுள்ளனர். வயதான இருவர் இருப்பதை அறிந்த கொள்ளையர்கள் கத்தி முனையில் அவரை வீட்டிற்குள் அழைத்துச் சென்றதுடன், வெங்கடாஜலபதியின் மனைவி பிருந்தாவையும் பலமாக தாக்கியுள்ளனர். மேலும் பிருந்தாவிடம் நகைகள் எங்குள்ளது சொல்லாவிட்டால் உன்னை கொன்று விடுவோம் என்று கொலை மிரட்டல் விட்டதும் உயிருக்கு பயந்த தம்பதியினர் வீட்டின் பீரோ சாவியை கொடுத்துள்ளனர். பின்னர் அவர்களை ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பீரோவில் இருந்து 7 லட்சம் மதிப்பிலான 10 சவரன் தங்க நகைகள், மற்றும் 2, 1/2 கிலோ வெள்ளி பொருட்களும், 70 ஆயிரம் ரொக்கமும் கொள்ளையடித்து தப்பித்துச் சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்பெண்ணாத்தூர் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் வழக்கு பதிவு செய்த கீழ்பெண்ணாத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைத்து கைரேகைகளை பதிவு செய்ததுடன், அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி கொள்ளையடித்து தப்பித்துச் சென்ற முகமூடி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். நள்ளிரவு முகமூடி, மாஸ்க் அணிந்து வந்து வயதான தம்பதியினரை கத்தி மற்றும் கடப்பாரையால் தாக்கி கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடைபெற்று வருகிறது. இதனால் ரோந்து பணியில் ஈடுப்படும் காவல்துறையினர் கவனமாக செயல்பட வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.