‛அடிச்சிடுவியா... சாதாரண ஆள் கிடையாது; சட்டை வாங்கிக்கொடு’ -டிராபிக் போலீசிடம் போதை ஆசாமி ரகளை!
இங்கு ஒருத்தர், போலீஸ் என்றே தெரிந்தும் அவரிடம் செம ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேல் போலீஸ் அதிகாரி என்று தெரியாமல் ஒருவரிடம் ரகளையில் ஈடுபடுவார். “என்னாது போய் தொலையா... நாங்க போவோம்.. இல்லைன்னா இங்கேயே பாய் போட்டு மல்லாக்க படுத்து தூங்குவோம்.. உனக்கென்ன?” என்பார் வடிவேல். வேண்டாம் என போலீஸ் கூற ‘என்ன கொடுத்தாங்க உனக்கு வேணாம்ங்கிற’ என்று அதற்கும் நக்கல் அடிப்பார். மேலும் “நாங்க ரொம்ப மோஷமான ஆளு... எந்த லெவலுக்கு இறங்கி அடிமட்டம் வரைக்கும் சென்று அலசுவோம்” என உதார் விடுவார் வடிவேல். என்ன சண்டைக்கு வரியா என போலீஸ் கேட்க, மண்ட பத்திரம் எனக்கூறி வடிவேல் சைகையிலேயே அவரை போகச்சொல்வார். “பாளையங்கோட்டை ஜெயில்லதான் படிச்சதே... வேலூர் ஜெயில்ல வெள்ளையடிச்சி வாடகைக்கு விட்டுட்டு திரியிறோம். பல ஆண்டுகளாக மதுரை ஜெயில்ல மைதானம் அமைச்சி மல்யுத்தம் நடத்தன பரம்பரை எங்க பரம்பரை” என இஷ்டத்துக்கு அடிச்சி விடுவார். இறுதியில் அவர் போலீஸ் எனத் தெரிஞ்சதும் அப்படியே பம்பி விடுவார்.
ஆனால் இங்கு ஒருத்தர், போலீஸ் என்றே தெரிந்தும் அவரிடம் செம ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேரூராட்சி ஏரிக்கரைமூலைப்பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தப்பேட்டையிலிருந்து ஏரிக்கரைமூலைப்பகுதிக்கு 3 பேர் பதிவு எண் இல்லாத இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இதைப்பார்த்த போக்குவரத்து தலைமை காவலர் செல்வக்குமார் அவர்களை தடுத்து நிறுத்தினார்.
உடனே வாகனத்தில் வந்த இரண்டு பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். அதில் ஒருவரை செல்வக்குமார் சட்டையை பிடித்து இழுத்து நிறுத்தியதாக தெரிகிறது. இதில் அந்த நபரின் சட்டை பட்டன் பிய்ந்துள்ளது. இதனால் அந்த நபர் ஆத்திரமடைந்து போலீசாரிடம் செம ரகளையில் ஈடுபட்டார். ஒழுங்கா போ என போலீஸ் சொல்ல, அதற்கு வடிவேல் போல் “என்னை அடிச்சிடுவியா.. அடிச்சிடுவியா... ஊர்க்காரன். சட்டையை பிடித்து இழுக்குற. என் மானம் என்ன ஆகுறது. சட்டை பட்டனை பிச்சிட்ட. என் சட்டைய பிடிச்சவன் தலை இங்கேயே துண்டாகிருக்கும்” என சத்தம் போட்டுள்ளார். பட்டனை தச்சிக்கலாம் என போலீஸ் சொல்ல, அதெல்லாம் முடியாது... புது சட்டை வாங்கிக்கொடு என கூறுகிறார் அந்த நபர்.
இதையடுத்து தகவலறிந்து வந்த உதவி ஆய்வாளர் சிவசந்திரன் ரகளையில் ஈடுபட்ட இளைஞரை சட்டை வாங்கித்தருவதாக கூறி காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில், ரகளையில் ஈடுபட்ட நபர் அரும்பாக்கத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பதும் அவர் போதையில் இருந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து போக்குவரத்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து ரகளையில் ஈடுபட்டதற்காக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.