திருவாரூர்: 10ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை; இளைஞர் போக்சோவில் கைது
தீனதயாளன் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதனால்தான் தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் காட்டூர் விளாகம் பகுதியைச் சேர்ந்த பெண்ணின் கணவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். அப்பெண் தனது பத்தாம் வகுப்பு படிக்கும் மகளுடன் வசித்து வந்துள்ளார். மற்றொரு மகள் பெண்ணின் தம்பி வீட்டில் படித்து வருகிறார். 10ம் வகுப்பு மாணவி காலாண்டு விடுமுறை காரணமாக வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் காட்டூர் விளாகம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் 19 வயதான தீனதயாளன் டிப்ளமோ முடித்துவிட்டு வீட்டில் உள்ளார். தீனதயாளன் குடும்பமும் அப்பெண்ணின் குடும்பமும் நட்பு ரீதியில் பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் தீனதயாளனும், மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிய வந்ததால் இரு வீட்டிலும் அவர்களை கடுமையாக கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில், மாணவி அம்மா தேங்காய் கடையில் வேலை செய்து வருகிறார். அவர் வேலைக்காக சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது மாணவி புடவையில் தூக்கு மாட்டி இருந்துள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த திருவாரூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தாயார் தீனதயாளன் தனது மகளை தாக்கியதாகவும் அவரது அம்மா தன் மகளைப் பற்றி ஊர் முழுவதும் தரக்குறைவாக பேசியதாகவும் தன்னிடமே தனது மகளை பற்றி தரக்குறைவாக கூறியதாகவும் தீனதயாளன் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதனால்தான் தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அனைத்து மகளிர் காவல்துறையினர் தற்கொலைக்கு தூண்டியதாகவும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் போக்சோ வழக்குப் பதிவு செய்து காதலன் தீனதயாளனை கைது செய்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து மாணவியின் தாயார் கூறுகையில், ஒரே ஊர் என்பதால் எங்களது குடும்பமும் அவர்களது குடும்பமும் நட்பு ரீதியாக பழகி வந்தோம். இந்தநிலையில் இவர்களின் காதல் விவகாரம் தெரிய வந்ததும் நான் எனது மகளை கண்டித்து வைத்தேன். அதே சமயம் தீனதயாளின் அம்மா ஊர் முழுவதும் எனது மகளை பற்றி அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசி வந்திருக்கிறார். மேலும் என்னிடமும் போன் செய்து எனது மகளைப் பற்றி தரக்குறைவாகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளையும் கூறினார். ஊர் முழுவதும் எனது மகளைப் பற்றி பொய் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வந்துள்ளார். மேலும் கடந்த 3 ஆம் தேதி இருந்த தீனதயாளன் எனது மகளுடன் தகராறில் ஈடுபட்டு எனது மகளை அடித்து காயப்படுத்தி உள்ளார். இந்தத் தொடர் பிரச்சினைகள் காரணமாக மன உளைச்சலில் இருந்த எனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் எனது மகளை போன் மூலம் தனது பாலியல் இச்சைக்கு இணங்குமாறும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதன் காரணமாகவே எனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.