Crime: பள்ளி நூலகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு; ஆய்வக உதவியாளர் போக்சோவில் கைது
ஆரணி அருகே 8ம் வகுப்பு மாணவிகளிடம் தவறாக நடந்த அரசு மேல்நிலை பள்ளி ஆய்வக உதவியாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
![Crime: பள்ளி நூலகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு; ஆய்வக உதவியாளர் போக்சோவில் கைது Tiruvannamalai: Laboratory assistant arrested under POCSO Act for sexually harassing 8th class schoolgirls TNN Crime: பள்ளி நூலகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு; ஆய்வக உதவியாளர் போக்சோவில் கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/18/ac1c1f6844f417a68b8355afad91fee11668753610170109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் மட்டும் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தலைமையாசிரியை உட்பட சுமார் 25க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அரசு மேல்நிலை பள்ளியில் ஆய்வக உதவியாளர் சோமதாங்கல் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி வயது (60) என்பவர் பணிபுரிந்து வருகிறார். கோவிந்தசாமி அரசு பள்ளியில் ஆய்வக பணியை முடித்து விட்டு, இடைவேளை நேரத்தில் பள்ளியில் உள்ள நூலகத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதில் சில நாட்களாக ஆய்வகத்திற்கு வரும் 8ம் வகுப்பு மாணவிகளுடன் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், நூலகத்தில் 8ம் வகுப்பு மாணவிகளுக்கு கடந்த சில தினங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதனால் மாணவிகள் மனவேதனை அடைந்து என்ன செய்வது என்று அறியாமல் தங்களின் பெற்றோர்களிடம் ஆய்வக உதவியாளர் கோவிந்தசாமி செய்த சம்பவத்தை தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் நான்கு நாட்கள் முன்பு பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் எங்களின் பிள்ளைகளிடம் ஆய்வக உதவியாளர் கோவந்தசாமி பாலியல் தொந்தரவு செய்வதாக தெரிவித்துள்ளனர். உடனடியாக தலைமை ஆசிரியர் ஆய்வக உதவியாளர் கோவிந்தசாமியை இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளித்து வீட்டுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு பள்ளிக்கு மீண்டும் ஆய்வக உதவியாளர் வந்துள்ளார். இதனை அறிந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர். இது குறித்து தகவலறிந்த ஆரணி தாலுகா காவல்துறையினர் மற்றும் மாவட்ட கல்விநிர்வாகம், வருவாய் துறை ஆகியோர் நேரில் வந்து 8-ம் வகுப்பு மாணவிகளிடம் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர்.
அதன் பிறகு பாலியல் தொந்தரவு புகாரில் சிக்கிய ஆய்வக உதவியாளர் கோவிந்தசாமியை ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்தது உறுதி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஆரணி அனைத்து மகளிர் காவல்துறையினர் துணை ஆய்வாளர் மகாராணி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கோவிந்தசாமியை கைது செய்தனர். பின்னர் அவரை ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கோவிந்தசாமி இன்னும் 2 மாதத்தில் பணி ஓய்வு பெற உள்ளார். மேலும், பள்ளி நிர்வாகம் மெத்தன போக்கால் இச்சம்பவம் நடைபெற்றதாகவும், பள்ளி தலைமையாசிரியை இடமாறுதல் செய்யக்கோரி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)