'ஸ்ப்ளெண்டர் பிளஸ்' பைக்கை மட்டும் குறி வைத்து திருடும் திருடர்கள் - காரணம் என்ன.?
ஆரணியில் போலீசாரின் வாகன தணிக்கையில் போலீசாரை கண்டதும் தப்பிய நபர்களை துரத்தி பிடித்து விசாரணை பைக் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 7 பைக் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
ஆரணியில் போலீசாரின் வாகன தணிக்கையில் பைக் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 7 பைக் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
ஆரணி, களம்பூர் பகுதியில் இருசக்கர வாகனங்கள் தொடர் திருட்டு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர காவல் நிலையம், ஆரணி தாலுக்கா காவல் நிலையம் மற்றும் களம்பூர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்பவம் நடைபெற்று வந்துள்ளது. கடந்த ஒருவாரத்தில் மட்டும் 7-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடுபோயின. இதனால் இருசக்கர வாகனங்களை பறிகொடுத்த உரிமையாளர்கள் அச்சத்தில் இருந்தனர். வாகனத்தை பறிகொடுத்த உரிமையாளர்கள் அந்ததந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து ஆரணி துணை காவல்கண்காணிப்பாளர் ரவிசந்திரன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணி மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டுருந்தனர். அப்போது ஆரணி நகர நெடுஞ்சாலையில் காவல்துறையினர் வாகன தணிக்கையின்போது மின்னல் வேகத்தில் 2 இருசக்கரத்தில் 4 பேர் வந்த போது திடீரென இருசக்கரத்தில் நிறுத்தி திரும்பி செல்ல முயன்றனர்.
பைக் திருட்டில் ஈடுபட்ட நான்கு பேர் கைது
இதனைக்கண்ட காவல்துறையினர் சந்தேகமடைந்து 2 இருசக்கர வாகனங்களையும் துரத்தி பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் நான்கு பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் நான்கு பேர்களையும் காவல்நிலையத்தில் அழைத்து வந்து தங்களின் பாணியில் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுக்காவை சேர்ந்த மணிகண்டன், ராமகிருஷ்ணன், விக்ரம், கோகுலகிருஷ்ணன் என்பதும் இவர்கள் நான்கு பேர்களும் ஆரணி சுற்றுவட்டார பகுதியில் தொடர் இருசக்கர வாகனங்களை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தன. பின்னர் நான்கு பேரிடம் இருந்து 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வட்டாரத்தில் பேசுகையில்,
திருடப்படும் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் இருசக்கர வாகனத்தை மட்டும் குறி வைத்து திருவடுவதாகும், இதனை திருடுவதற்கு எளிமையான முறையில் உள்ளதாகவும் பழைய இரு சக்கர சாவியை பயன்படுத்தி தற்போது உள்ள இருசக்கர வாகனங்களில் சுலபமாக லாக்கினை திறந்து எடுத்து செல்கிறார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களை உரிய நபர்களிடம் ஒப்படைக்க பட உள்ளதாகவும், அதேபோன்று நீங்கள் வைத்திருக்கும் வாகனங்கள் திருடு போனால் அருகில் உள்ள காவல்நிலையில் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் ஆரணி,களம்பூர் பகுதியில் உள்ள வாகன ஓடிகளிடையே பெரும் அச்சத்தையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.