Tiruppur Honour Killing: திருப்பூரை அதிர வைத்த ஆணவ படுகொலை? - கல்லூரி மாணவியை கொன்ற அண்ணன் கைது
திருப்பூர் அருகே கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் காதலை கைவிடாததால் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததாக மாணவியின் சகோதரன் போலீசில் வாக்குமூலம் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள பருவாய் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. கூலித் தொழில் செய்து வருகிறார். இவர் மனைவி தங்கமணி, மகன் சரவணன், மகள் வித்யா உடன் வசித்து வந்தார்.
மகள் வித்யா கோவை அரசு கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் வித்யா திருப்பூர் விஜயாபுரம் பகுதியை சேர்ந்த வெண்மணி என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களின் காதல் விவரம் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. இந்த நிலையில் வித்யாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 30 ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பீரோ விழுந்ததில் வித்யா உயிரிழந்ததாக கூறி அவரது குடும்பத்தார் வித்யாவின் உடலை அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்துள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்த பருவாய் கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், வித்யாவின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தும் படி காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பல்லடம் வட்டாட்சியர் தலைமையில், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர்கள் உதவியுடன் உடலை நேற்று மாலை தோண்டி எடுத்து சுடுகாட்டிலேயே வைத்து பிரேத பரிசோதனை செய்தனர். இதில் வித்யா தலையில் பலத்த காயம் இருப்பது தெரியவந்தது. மேலும் அவரது உடல் பாகங்களை சோதனைக்காக மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதோடு பிரேத பரிசோதனை முடிந்தவுடன் சுடுகாட்டுக்கு வெளியே இருந்த வித்யாவின் தந்தை தண்டபாணி மற்றும் அண்ணன் சரவணன் இருவரையும் விசாரணைக்காக காமநாயக்கன்பாளையம் போலீசார் அழைத்துச் சென்றனர்.
வித்யாவின் தலையில் பலத்த காயம் இருந்தது கொலையா அல்லது விபத்தா என்பது வித்யாவின் உடல் முழுமையான உடற்கூறாய்வு செய்த பின்னரே தெரியவரும். அதன் பின்னர் அறிக்கையானது போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே இன்று போலீசார் வித்யாவின் தாய், தந்தை மற்றும் அவரது சகோதரரிடம் நடத்திய கிடுக்கு பிடி விசாரணை நடத்தினர். அதில் தனது தங்கையிடம் பலமுறை காதலை கைவிடுமாறு தெரிவித்த நிலையில் அவர் காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரத்தில் இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியது. தற்போது போலீசார் வித்யாவின் அண்ணன் சரவணனை கைது செய்ததோடு வித்யாவின் தந்தை தண்டபாணி மற்றும் தாய் தங்கமணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, ஆணவக்கொலை கிடையாது திருப்பூர் எஸ்.பி. கிரிஷ் யாதவ் கூறுகையில், கல்லூரி மாணவி கொலை வழக்கில் வித்யாவை நன்றாக படிக்குமாறு அண்ணன் சரவணன் தெரிவித்து வந்தார். அதனால் அண்ணனுடன் கடந்த இரண்டு மாதமாக வித்யா பேசவில்லை. இந்த நிலையில் காதலை கைவிட்டு படிக்குமாறு தெரிவித்த போது வித்யா மறுத்து பேசியதால் ஆத்திரமடைந்த சரவணன் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தார் என தெரிய வந்துள்ளது. கொலை நடந்த சமயத்தில் பெற்றோர் வெளியே இருந்தது உறுதியாகி உள்ளது எனவும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் குமார் யாதவ் தெரிவித்தார்.

