Crime: 2003 ஆம் ஆண்டில் துவங்கிய கொலை - தொடரும் பழிவாங்கல்
காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த ஜெயப்பிரகாஷை பிடிக்க முயற்சித்த போது காவல்துறையினரை தாக்கி தப்பியோட முயற்சித்ததால் சுதாரித்த போலீஸ் அவரை சுட்டுப்பிடித்தனர்.
தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயப்பிரகாஷை போலீஸ் சுட்டுப் பிடித்தது. தட்டப்பாறை அருகே காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த ஜெயப்பிரகாஷ் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஜெயப்பிரகாஷின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி சோரீஸ்புரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் பிச்சைக்கண்ணன். இவருடைய மகன் முத்துக்குமார் (வயது 45). வக்கீலான இவர் நகை அடகு கடையும் நடத்தி வந்தார். இவர் கடந்த 22-ந்தேதி சோரீஸ்புரத்தில் உள்ள தனது அடகு கடைக்கு சென்றபோது மர்மகும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கடந்த 2003-ம் ஆண்டு தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்த ராஜேஷின் அண்ணன் ஆத்திப்பழம் கொலை செய்யப்பட்டதும், இந்த வழக்கில் தொடர்புடைய வக்கீல் முத்துக்குமாரின் தம்பி சிவகுமார் கடந்த 2019-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. மேலும் சிவகுமார் கொலை வழக்கில் கைதான ராஜேஷ் கோவை சிறையில் இருப்பதும், அவர் ஜாமீனில் வெளியே வருவதற்கு வக்கீல் முத்துக்குமார் இடையூறாக இருந்ததும், இதனால் ராஜேஷின் ஆதரவாளார்கள் வக்கீல் முத்துக்குமாரை தீர்த்துக்கட்டியதும் தெரியவந்தது.
வக்கீல் முத்துக்குமார் கொலை வழக்கு தொடர்பாக வேல்முருகன் (25), ராஜரத்தினம் (25), இலங்கேசுவரன் (30), முத்துராஜ், ரமேஷ் ஆகிய 5 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இவர்களில் வேல்ருகன், ராஜரத்தினம், இலங்கேசுவரன் ஆகிய 3 பேரையும் சிப்காட் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், வக்கீல் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயப்பிரகாஷ் தட்டப்பாறை அருகே உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குற்றவாளியை பிடிக்க முயற்சித்தனர். அப்போது காவல்துறையினரை தாக்கிவிட்டு ஜெயப்பிரகாஷ் தப்ப ஓட முயற்சி செய்தார். சுதாரித்துக்கொண்ட போலீசார் குற்றவாளி ஜெயபிரகாஷை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஜெயபிரகாஷ் காலில் காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.