அண்ணாச்சி மன்னிச்சிக்கோங்க உங்க மாட்டை திருடியது தப்பு தான் - பயத்தில் திருடன் செய்தது என்ன?
உங்களது மாடு சங்கரன்குடியிரப்பு கெபி அருகே உள்ள புளியமரத்து அடியில் கட்டப்பட்டுள்ளது. லொக்கேஷன் இட்டமொழி ரோடு என்று குறிப்பிடப்பட்டிருந்தது
![அண்ணாச்சி மன்னிச்சிக்கோங்க உங்க மாட்டை திருடியது தப்பு தான் - பயத்தில் திருடன் செய்தது என்ன? Thoothukudi news interesting that the thief who stole the cows left the cows near Satankulam - TNN அண்ணாச்சி மன்னிச்சிக்கோங்க உங்க மாட்டை திருடியது தப்பு தான் - பயத்தில் திருடன் செய்தது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/02/e1de046d65cef2033e6a811fb42646d41714664344890571_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சாத்தான்குளம் அருகே மாடுகளை திருடிச் சென்ற திருடன் போலீசில் சிக்கிவிடுவோமோ என்ற பயத்தில் அட்டையில் மாடு இருக்கும் இடத்தை எழுதி வைத்து விட்டு மாடுகளை விட்டுச்சென்ற சுவாரஸ்யம் சம்பவம் நடந்தேறியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஞானியார்குடியிருப்பைச் சேர்ந்தவர் பட்டுராஜ். இவருக்கு சொந்தமான தோட்டம் புதுக்குளம் சந்திப்பு பகுதியில் உள்ளது. அந்த தோட்டத்தில் 5க்கும் மேற்பட்ட பால்மாடுகளை வளர்த்து தினமும் பால்கறந்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டுராஜ் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த மாடுகளில் 2 மாடுகள் மட்டும் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக பட்டுராஜ் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மேலும் தனது மாடுகளை கண்டுபிடிப்பதற்காக அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் தீவிரமாக சோதனை செய்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் வள்ளியூர் மற்றும் மேலப்பாளையம் மாட்டுச்சந்தைக்கு சென்று தனது மாடுகளின் புகைப்படத்தை காண்பித்து யாரும் கொண்டு வந்தால் தனக்கு தகவல் தெரிவிக்கும்படி கூறியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை பட்டுராஜ் வழக்கம்போல் தோட்டத்திற்கு சென்றுள்ளார். தோட்டத்தின் வாசலில் இருந்த வேலியில் ஒரு அட்டை கட்டப்பட்டிருந்தது. அந்த அட்டையில் "உங்களது மாடு சங்கரன்குடியிரப்பு கெபி அருகே உள்ள புளியமரத்து அடியில் கட்டப்பட்டுள்ளது. லொக்கேஷன் இட்டமொழி ரோடு" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உடனே பட்டுராஜ் அதில் குறிப்பிட்டிருந்த இடத்திற்கு வேகமாக சென்றார். அங்கு அவரது 2 மாடுகளும் கட்டப்பட்டிருந்ததை கண்டு மகிழ்ச்சியில் மாடுகளை அவிழ்த்து தனது தோட்டத்திற்கு கொண்டு வந்தார்.
மாடுகளை பட்டுராஜ் தீவிரமாக தேடி வருவதை அறிந்த திருடர்கள் அட்டையில் மாடு இருக்கும் இடத்தின் விவரத்தை எழுதி வைத்து விட்டு மாடுகளை விட்டுச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சாத்தான்குளம் போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)