Crime: தனது குடும்பத்திற்கு செய்வினை செய்வதாக ஊராட்சி மன்றத் தலைவர் கொலை - இளைஞர் கைது
பன்னீர்செல்வம் தனது குடும்பத்திற்கு செய்வினை செய்திருப்பதாக கருதி பன்னீர்செல்வம் மது அருந்து கொண்டிருந்தபோது போதையில் சென்ற விஜய் அவரை தலையில் இரண்டு இடங்களில் வெட்டியுள்ளார்.
தனது குடும்பத்திற்கு செய்வினை செய்வதாக கருதி ஊராட்சி மன்றத் தலைவரை வெட்டிக் கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட அரையூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் பன்னீர்செல்வம். இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் 26 வயதான விஜய். இவருக்கும் பன்னீர் செல்வத்திற்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் புது வீடு கட்டியும் நிம்மதி இல்லாமல் இருந்ததால் விஜயின் தாய், தந்தை வீட்டை விட்டு வெளியேறி சென்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும் விஜய்யின் 18 வயது தங்கையை பன்னீர்செல்வத்தின் சகோதரர் அழைத்துச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி இவர்கள் இருவருக்கும் இடையே இடப்பிரச்சனை தொடர்ந்து இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் பன்னீர்செல்வம் தனது குடும்பத்திற்கு செய்வினை செய்திருப்பதாக கருதி நேற்று நள்ளிரவு கொட்டையூர் என்கிற இடத்தில் பன்னீர்செல்வம் மது அருந்து கொண்டிருந்தபோது போதையில் சென்ற விஜய் அவரை தலையில் இரண்டு இடங்களில் வெட்டியுள்ளார்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் பன்னீர்செல்வத்தை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். தொடர்ந்து விஜய் அந்தப் பகுதியில் இருந்தால் தனக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் தனது இரு சக்கர வாகனத்தில் பல்வேறு இடங்களில் சுற்றியுள்ளார். தொடர்ந்து திருவாரூர் ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து காவல்துறையில் சரணடைவதற்காக வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கு யாரும் இல்லாததால் திருவாரூர் நீதிமன்றத்தில் ஆஜராகலாம் என வந்துள்ளார். அங்கும் யாரும் இல்லை நீதிமன்றம் பூட்டி இருந்ததால் திருவாரூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்துள்ளார். அவரை நன்னிலம் காவல் ஆய்வாளர் சுகுணாவிடம் விஜயை ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து விஜயிடம் வலங்கைமான் காவல் துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையினர் விசாரணையில் விஜய் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். அதில், தனது 18 வயது தங்கையை ஆசை வார்த்தை கூறி பன்னீர்செல்வத்தின் சகோதரர் அழைத்துச் சென்று விட்டதால் எங்கள் குடும்பத்தில் அதிக பிரச்சனை ஏற்பட்டது. இதற்கு காரணம் பன்னீர்செல்வம் தான் அது மட்டும் இன்றி எங்களுடைய பூர்வீக நிலத்தில் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்தார். அது மட்டுமின்றி மாந்திரீகம் உள்ளிட்ட செயலில் தொடர்ந்து அவர் எங்களுக்கு எதிராக செயல்பட்டு வந்ததால் எங்கள் குடும்பத்தில் பல்வேறு பிரச்னைகள் தொடர்ந்து ஏற்பட்டு வந்ததால் அவரை கொலை செய்வது என திட்டமிட்டு முடிவு செய்தேன்.
அதனையடுத்து அவர் தொடர்ந்து மது அருந்தும் இடத்திற்கு சென்று அவரை கத்தியால் தலையில் வெட்டி கொலை செய்தேன் என வாக்கு மூலம் அளித்துள்ளார். அதனையடுத்து அவர்கள் மீது வலங்கைமான் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாந்திரீகம் செய்ததாக கூறி தனது வீட்டில் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வருகிறது என நினைத்து மது போதையில் ஊராட்சி மன்ற தலைவரை இளைஞர் கொலை செய்த சம்பவம் வலங்கைமான் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தவறு செய்த நபருக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என உயிரிழந்த பன்னீர்செல்வத்தின் உறவினர்கள் காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.