திருவண்ணாமலை: தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்? - திமுக நிர்வாகியின் மருத்துவமனை மீது புகார்
தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்துவிட்டதாக கூறி உறவினர்கள் 2ஆவது நாளாக சாலை மறியல்
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகிலுள்ள வரகூர் பகுதியைச் சேர்ந்த முருகனின் மனைவி ராஜகுமாரி (38). இவர் வயிற்றில் உள்ள நீர் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 20ஆம் தேதி காலையில் அனுமதிக்கப்பட்டார். அன்று மாலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது ராஜகுமாரி உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனை நிர்வாகம் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அன்று இரவு சேர்க்கப்பட்டார். அங்கு அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் மாலையில், பாதிக்கப்பட்ட ராஜகுமாரியின் உறவினர்கள், ராஜகுமாரிக்கு தவறாக சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாகவும், மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த நிலையில் நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜகுமாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜகுமாரியின் உறவினர்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று மதியம் திரண்டனர். பின்னர் அவர்கள் வேலூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் தான் பேசுவோம் என்று கூறியதை அடுத்து கலெக்டர் பங்களாவிற்கு ராஜகுமாரியின் உறவினர்கள் சிலரை காவல்துறையினர் அழைத்து சென்றனர். பின்னர் அங்கு அவர்கள் மாவட்ட ஆட்சியர் முருகேஷை நேரில் சந்தித்தபோது திருவண்ணாமலையில் உள்ள சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையின் மூலம் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டால் ராஜகுமாரி உயிரிழந்து விட்டார். எனவே அந்த மருத்துவமனை மற்றும் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
இது குறித்து மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் மூலம் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாக ராஜகுமாரியின் உறவினர்கள் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது குறித்து ராஜகுமாரியின் உறவினர்களிடம் பேசுகையில்;
நாங்கள் ராஜகுமாரியை தனியார் ராஜ் மருத்துவ மனையில் சேர்த்தோம் அங்குள்ள மருத்துவர் பரிசோதனை செய்து விட்டு அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கர்ப்பையில் இருந்து நீர் கட்டி அகற்றம் செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் உடனடியாக நீங்கள் 50 ஆயிரம் கட்டவேண்டும் என்று மருத்துவர் கதிரவன் தெரிவித்தார் அதன் அடிப்படையில் நாங்கள் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கட்டியதும், அவர்கள் ராஜகுமாரிக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது திடீரென ராஜேஸ்வரிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை இங்கு வைத்து பார்க்க முடியாது அதனால் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விடுங்கள் என்று கூறினர். ஆனால் ராஜகுமாரியின் வயிற்றில் ஸ்டேப்லர் போன்று பின் அடித்து உள்ளனர். அப்போது தான் அவர்கள் தவறான சிகிச்சை அளித்தால் தான் ராஜகுமாரியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது.
இது குறித்து நாங்கள் குற்றம் சாட்டியதை அடுத்து, ராஜ் மருத்துவமனை மருத்துவர் கதிரவன் மனைவி திமுக மருத்துவர் அணி செயலாளர் உள்ளதால் அந்த ராஜ் மருத்துமனைக்கு ஆதரவாக சில முக்கிய பிரமுகர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனால், சந்தேகமடைந்த நாங்கள், நீதி கேட்டு ராஜ் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபடுபட்டோம். தற்போது ராஜகுமாரி காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இவர்களின் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் கதிவரன் உள்ளிட்டவர்கள் மீதும் ராஜ் தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். நீதி கேட்டு சென்றால் கடைசியாக மிஞ்சுவது ஏமாற்றம் தான் என அழுத்துக்கொண்டே தெரிவித்தார்