மயான கொள்ளை உற்சவத்தில் இரு தரப்பு இளைஞர்கள் மோதல் - திருவண்ணாமலை பரபரப்பு
திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் மயான கொள்ளை உற்சவத்தில் இரு தரப்பு இளைஞர் இடையே கடுமையான மோதலால் பரபரப்பு.
மாசி மாத சிவராத்திரியை தொடர்ந்து அடுத்து வரக்கூடிய அமாவாசை நாளில் தமிழகம் முழுவதும் மயான கொள்ளை திருவிழா நடைபெறுவது வழக்கம. இந்நிலையில் திருவண்ணாமலை நகரில் தண்டராம்பட்டு சாலையில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி திருக்கோவில், திருவண்ணாமலை சிவன் பட வீதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி திருக்கோவில், மத்திய பேருந்து நிலையம் அருகே புது தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் என மூன்று திருக்கோவில்களிலும் நேற்று மயான கொள்ளை திருவிழா வெகு விமரி சையாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் காளி, அம்மன், சிவன், அங்காளம்மன் போன்ற கடவுள்களின் வேடம் உள்ளிட்ட பல்வேறு சாமிகளின் வேடமடைந்த பக்தர்கள் ஆடிப்பாடி ஊர்வலமாக சென்றனர்.
நகரின் முக்கிய வீதிகளான பெரியதெரு , சன்னதி தெரு, மத்திய பேருந்து நிலையம் வழியாக உலா வந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் மாலை 6 மணி அளவில் ஈசானிய மைதான திடலில் திருவண்ணாமலை நகரில் உள்ள மூன்று அங்காள பரமேஸ்வரி அம்மன் மயானசூரை உற்சவம் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்றது. அப்போது அங்கு இதனை காண 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்று கூடினர். இதில் முன்விரோதம் காரணமாக கஞ்சா மட்டும் மது போதையில் திருவண்ணாமலை கோபுர தெரு பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும், ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மயான கொள்ளை நடைபெறும் இடத்தில் இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அடுத்து கைகலப்பாக மாறியது.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் தடுத்து சமாதானம் செய்தனர். ஆனாலும் சமாதானம் ஆகாத இளைஞர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். மேலும் அங்கு இருந்த கத்தி சூலம், கல் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு மண்டை உடைந்தது. மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். முன்விரோதம் காரணமாகவா அல்லது வேறு ஏதோ காரணங்கள் இருக்குதா என பல்வேறு கோணங்களில் விசாரணை கொண்டு வருகின்றனர்.
மயான சுரை உற்சவத்தில் இருதரப்பினிடையே மோதல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவர்களை கைது செய்து வருகின்றனர். ஆனால் அதையும் மீறி திருவண்ணாமலை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி கோயில் திருவிழா பொதுமக்கள் கூடும் இடங்களில் இதனால் தேவையின்றி பல அடிதடிகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.