பேய் பிடித்திருப்பதாகக் கூறி 7 வயது சிறுவனை அடித்துக்கொன்ற தாய் உட்பட மூவர் கைது..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 7வயது சிறுவனுக்கு பேய் பிடித்து இருப்பதாக கூறி தாய் உட்பட 3 பெண்கள் சிறுவனை அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து 3 பெண்களை கண்ணமங்கலம் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலம் பேரூராட்சி வளாகத்துக்கு, அருகில் நேற்று இரவு ஒரு சிறுவனை 3 பெண்கள் அடித்து துன்புறுத்துவதாக கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நேரில் சென்று விசாரணை செய்தபோது சிறுவன் இறந்துவிட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் கிராமத்தை சேர்ந்த 3 பெண்களை போலீசார் கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் கிராமத்தை சேர்ந்த திலகவதி என்பதும், திலகவதியின் கணவர் கார்த்தி என்பவர் கடந்த 2ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், தற்போது வேலூர் மாவட்டம் அரியூர் கிராமததில் தன்னுடைய மகன் சபரி (7) என்பவருடன் வசித்து வந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில் தன்னுடைய 7 வயது சிறுவன் சபரி என்பவருக்கு பேய் பிடித்து இருப்பதாக கூறி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள ஒருவரிடம் அழைத்து செல்ல நேற்று ஆட்டோவில் கண்ணமங்கலம் பேரூராட்சி வழியாக வரும்போது இரவு நேரம் ஆகிவிட்டதால் கண்ணமங்கலம் பகுதியிலேயே ஆட்டோ ஒட்டுநர, அவர்களை இறக்கிவிட்டதாகவும் இரவு நேரம் ஆகிவிட்டதால் கண்ணமங்கலம் பேரூராட்சியில் தங்கியுள்ளனர். அப்போது, திடீரென சிறுவனுக்கு வலிப்பு வந்ததாகவும் அப்போது சிறுவனை தாக்கியதாகவும், இதனால் இறந்துவிட்டதாகவும் 7 வயது சிறுவனின் தாயார் திலகவதி தெரிவித்தார். மேலும் திலகவதியுடன் வந்த 2 பெண்கள் திலகவதியின் சகோதரிகள் கவிதா, பாக்கியலட்சுமி என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 3 பெண்களையும் கைது செய்து, வழக்குப்பதிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி யிடம் விசாரித்தபோது, ”இது குறித்து சிறுவனின் தாய் உட்பட 3 பெண்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் தெரிகிறது. குழந்தை இறந்த பிறகும் நன்றாக உள்ளான், தண்ணீர் குடி என்று சொல்கின்றனர். இறந்த குழந்தையை காவல்துறையினர் எடுத்து செல்லும்போது நன்றாக உள்ள என் மகனை எதற்கு நீங்கள் கூட்டி செல்கின்றனர் என்றெல்லாம் கூறுகின்றனர். மருத்துவரை வரவழைத்து பார்த்து அவர்களிடம் முழு விசாரணை நடத்திய பின்னரே உண்மை சம்பவம் தெரியவரும்” என தெரிவித்தார்.