இடப் பிரச்சினையால் இருவர் வெட்டி கொலை - விருந்தாளியாக வந்தவர் உயிரிழந்த சோகம்
அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் இருதரப்பிலும் மாறி, மாறி தாக்கி கொண்ட சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அரிவாளால் வெட்டப்பட்ட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ வீரர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் வெறிச்செயலில் ஈடுபட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு தரப்பிலும் சரமாரியாக அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக் கொண்ட சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி வடக்குத் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (65). இவரது மனைவி விஜயா (57) மகன் பார்த்திபன் (32). இவர் காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி தற்போது விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார்.
இவர்கள் வசிக்கும் வீட்டு பக்கத்து வீட்டில் வசிப்பவர் சுந்தர் (65). அவரது மனைவி சுதா (54). மகன் சூர்யா (27). சுதாவின் அப்பா முத்துமாயன் (80). இருவருக்கும் அடுத்தடுத்த வீடுகள் என்பதால் பாதை தகராறு ஏற்பட்டு அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் வீட்டின் முன்பு இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு தகராறு முற்றி கைகலப்பாக மாறி உள்ளது. இதில் இரு தரப்பிலும் மாறி, மாறி தாக்குதல் நடத்தியுள்ளனர். அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் இருதரப்பிலும் மாறி, மாறி தாக்கி கொண்ட சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதில் ஒரு தரப்பைச் சேர்ந்த பார்த்திபன், ராஜேந்திரன் ஆகியோர் அரிவாளால் வெட்டியதில் மற்றொரு தரப்பைச் சேர்ந்த முத்துமாயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுந்தர் படுகாயம் அடைந்தார். மேலும் இந்த தாக்குதலில் சுதா மற்றும் அவரது மகன் சூர்யாவும் காயமடைந்தனர். அனைவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்த சுந்தர் சற்று முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுதா மற்றும் சூர்யா ஆகியோர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். மேலும் சுந்தர் குடும்பத்தினர் தாக்கியதில் காயமடைந்த எதிர் தரப்பான பார்த்திபன், ராஜேந்திரன் மற்றும் விஜயா ஆகியோரும் காயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக உத்தமபாளையம் காவல்துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த முத்து மாயன் என்ற முதியவர் கம்பம் அருகே உள்ள K.K.பட்டியைச் சேர்ந்தவர். அனுமந்தன்பட்டியில் உள்ள தனது மகள் சுதா வீட்டிற்கு விருந்தாளியாக வந்த நிலையில் வெட்டப்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பக்கத்து வீடுகளுக்குள் ஏற்பட்ட பாதை தகராறு காரணமாக இரண்டு குடும்பத்தினர் சரமாரியாக அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக் கொண்டதில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் உத்தமபாளையம் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.






















