Crime: பெரியகுளம் அருகே போலீசாரை வெட்ட முயற்சித்த சம்பவம் - ஒருவர் கைது, மற்றொருவர் தப்பியோட்டம்
விசாரணைக்கு சென்ற காவல்துறையினரை ஓங்கி வெட்டினால் தலை துண்டாக போய்விடும் என மிரட்டி தகராறில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு தென்கரை பட்டாளம்மன் கோவில் அருகே உள்ள தோட்டி காலனி பகுதியைச் சேர்ந்த பிரபாகர் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தீபக் ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பரான காமராஜ் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மது போதையில் தீபக் ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பரான காமராஜ் இருவரும் கஞ்சா மற்றும் மது போதையில் அரிவாள் மற்றும் கத்தியுடன் பிரபாகரனின் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகளை கூறி பிரபாகரா உன்னை வெட்டாமல் விடமாட்டேன் என்று கூறி சத்தம் போட்டு உள்ளனர்.
அப்பொழுது பிரபாகரன் வீட்டில் இல்லாத நிலையில் அவரது தங்கை ஹேமலதா வெளியே வந்த போது, கத்தியால் அவரது உடையை கிழித்து வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கியதாகவும், அப்பொழுது ஹேமலதா அவசர எண் 100க்கு அழைத்து கத்தி மற்றும் அரிவாளுடன் இருவர் தகராறு செய்வதை புகார் தெரிவித்தார். உடனடியாக ஹேமலதா மற்றும் அவரது தாயை அழைத்துக் கொண்டு பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்திலிருந்து செந்தமிழன் மற்றும் தினேஷ் என்ற இரு காவலர்கள் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்ற பொழுது தகராறில் ஈடுபட்ட தீபக் ரவிச்சந்திரன் மற்றும் காமராஜ் ஆகிய இருவரும் இடுப்பில் இரண்டு டின் பீர்களை வைத்துக் கொண்டு விசாரணைக்கு சென்ற காவலர்களை யாரிடம் அனுமதி கேட்டு எங்களது தெரு பகுதிக்குள் உள்ளே வந்தீர்கள் என காவலர்களின் சட்டையை பிடித்து கேட்டதோடு உங்கள் மீது சாதி பெயரைச் சொல்லித் திட்டுனாய் என்று வழக்கு தொடுப்பேன் என மிரட்டி உள்ளனர்.
இதனை சற்றும் எதிர்பாராத காவலர்கள் உடனடியாக செல்போனில் வீடியோ எடுக்க தொடங்கியதாகவும், அப்பொழுது அந்த இருவரும் மது போதையில் காவலர்களிடம் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒரு கட்டத்தில் காமராஜ் என்ற இளைஞர் அவரது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த அரிவாளை எடுத்து விசாரணைக்கு சென்ற காவல்துறையினரை ஓங்கி வெட்டினால் தலை துண்டாக போய்விடும் என மிரட்டி தகராறில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து அங்கு இருந்த சிலர் அரிவாளை எடுத்து வெட்ட வந்த இளைஞர் காமராஜர் தடுத்து நிறுத்தியதோடு காவலர்களையும் அங்கிருந்து செல்லுமாறு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் காவல் நிலையம் திரும்பி சென்றனர். சம்பவத்தை அறிந்த தென்கரை காவல்துறை ஆய்வாளர் ஜோதி பாபு மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு காவலர்களை தகாத வார்த்தையில் திட்டியும் காவல்துறையினரை வெட்ட வந்தவர்களை கைது செய்ய முற்பட்டனர். அப்போது, வெட்டி விடுவேன் எனக் கூறிய காமராஜ் தப்பி ஓடிய நிலையில் தீபக் ரவிச்சந்திரன் என்ற இளைஞரை மட்டும் கைது செய்து வழக்கு பதிவு செய்து மேலும் தப்பி ஓடிய காமராஜ் என்ற இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
விசாரணைக்கு சென்ற காவலர்களை அரிவாளால் வெட்ட முயற்சி செய்த சம்பவம் பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, புகாரை விசாரிக்க சென்ற காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் காவல்துறையினரை அரிவாளை காட்டி வெட்ட முயற்சி செய்த சம்பவம் பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்