தங்கையின் முன்னாள் கணவருடன் கள்ளத்தொடர்பு: கண்டுபிடித்த கணவரின் கதையை முடித்த மனைவி!
கொலையை உறவினர்களிடையே தொடர்ந்து மறைக்க முடியாத காரணத்தால் பெரிய புதூர் கிராம நிர்வாக அலுவலரிடம் நடந்த விவரங்களைச் சொல்லி சரணடைந்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த ரிக் ஆபரேட்டர் வெங்கடேசன், இவர் தியாகதுருகத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஹரிகரன், சுப்பிரியா என்ற 2 குழந்தைகள் உள்ளனர். விஜயலட்சுமியின் தங்கை சரஸ்வதிக்கும் மிட்டாபுதூரைச் சேர்ந்த டிரைவர் குமரனுக்கும் திருமணம் ஆன நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். சரஸ்வதியின் கணவர் குமரன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார்.
இருப்பினும் குமரனும், வெங்கடேசனும் நட்பாகவே பழகி வந்துள்ளனர். இதை அடுத்து ஆத்தூரில் இருந்து சேலத்தில் வந்து குடியேற முடிவு செய்த வெங்கடேசன், குமரனிடம் தெரிவித்துள்ளார். இதை அடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெரியபுதூர் ராஜராஜன் நகரில் வாடகைக்கு வீடு ஒன்றை குமரன் பிடித்து கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் வெங்கடேசன் பணி மாறுதல் காரணமாக கோவைக்கு ரிக் ஆபரேட்டர் வேலைக்கு சென்றார். இதனால் மனைவி விஜயலட்சுமிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு வெங்கடேசன், தனது ஏடிஎம் கார்டை கொடுத்து தேவைப்படும்போது விஜயலட்சுமிக்கு பணம் எடுத்து கொடுக்குமாறு குமரனிடம் சொல்லி உள்ளார். நாளடைவில் விஜயலட்சுமிக்கும், குமரனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் கோவைக்கு வந்துவிட்டதாகவும் வெங்கடேசன் கடந்த 10 ஆம் தேதி குமாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் விஜயலட்சுமிக்கு தெரியாமல் அவரை கோவைக்கு அழைத்து வருமாறு வெங்கடேசன், குமாரிடம் கூறி உள்ளார். அதன்படி விஜயலட்சுமியை அழைத்து கொண்டு கோவை சென்று மூவரும் சேலம் திரும்பி உள்ளனர். வரும் வழியில் வெங்கடேசன் மற்றும் குமார் இருவரும் மது அருந்தி உள்ளனர். அதன்பின் வீடு திரும்பிய வெங்கடேசன் அவரது மனைவி விஜயலட்சுமியை சரமாரியாக அடித்துள்ளார். விஜயலக்ஷ்மியை ரூமை அடைத்துவிட்டு, குமாரை இரும்பு கம்பிகளால் அடித்துள்ளார். கள்ளத்தொடர்பு விவகாரம் வெங்கடேசனுக்கு தெரிந்துவிட்டது என்பதை சுதாரித்துக்கொண்ட குமார், வீட்டிலிருந்த அரிவாள் மனை பயன்படுத்தி வெங்கடேசனின் கழுத்தை அறுத்து கொன்றுள்ளனர்.
பின்னர் ஒரு நாள் முழுவதும் வீட்டில் சடலத்தை என்ன செய்வது என்று யோசித்து, 11 ஆம் தேதி இரவு சாக்குமூட்டையில் கல்லை வைத்து கட்டி மிட்டாபுதூர் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் வீசி உள்ளனர். இருப்பினும் செய்த கொலையை உறவினர்களிடையே தொடர்ந்து மறைக்க முடியாத காரணத்தால் குமரனும், விஜயலட்சுமியும் பெரிய புதூர் கிராம நிர்வாக அலுவலரிடம் நடந்த விவரங்களைச் சொல்லி சரணடைந்தனர். இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் புஷ்பா அழகாபுரம் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சரண் அடைந்த இருவரையும் காவல்துறையினர் சம்பவ பகுதிக்கு நேரில் அழைத்துச் சென்று கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் வெங்கடேசனின் சடலத்தை மீட்டனர். மேலும் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். திருமணத்தை மீறிய உறவால் கட்டிய கணவனை கொலை செய்து கிணற்றில் வீசிய மனைவி உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.