’உயிரிழந்த முதுகுளத்தூர் மணிகண்டன் ஓட்டி வந்தது திருட்டு பைக்’ காவல்துறை விசாரணையில் தகவல்..!
’’மணிகண்டன் ஓட்டி வந்த வாகனம் (TN59CJ0208) bajaj NS 200 மதுரை மாவட்டம் மேலூரில் பாத்திமா என்ற பெயரில் உள்ள வாகனம் என தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்’’
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள நீர்கோழியேந்தலை சேர்ந்தவர் லட்சுமணகுமார். இவரது மகன் மணிகண்டன் (21). கல்லூரி மாணவர். நேற்று மாலை பரமக்குடி-கீழத்தூவல் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த மணிகண்டன், தனது டூவீலரை நிறுத்தாமல் சென்றுள்ளார். அவரை விரட்டிச் சென்று பிடித்த போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் மணிகண்டனின் டூவீலர் மற்றும் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து அவரது தாயார் மற்றும் சகோதரருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து காவல்நிலையத்திற்கு வந்த இருவரும், மணிகண்டனை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் மணிகண்டனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்துள்ளனர். அவர்கள் வந்து பரிசோதித்த போது, மணிகண்டன் இறந்துபோனது தெரியவந்தது.
இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சீமான், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் அறிக்கைகள் விட்டு வரும் நிலையில் மாணவர் மணிகண்டனை காவல் நிலையத்தில் போலீசார் யாரும் அடிக்கவில்லை எனவும், அறிவுரை மட்டுமே வழங்கியதாகவும் ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில் மாணவர் மணிகண்டன் ஓட்டிய வாகனம் மதுரை மேலூரில் திருடப்பட்ட வாகனம் என போலீசார் தெரிவித்துள்ளனர். நீர்க்கோழி யேந்தல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற கல்லூரி மாணவர் கடந்த 4ஆம் தேதி இருசக்கர வாகனத்தை (TN05 CD 2641) வாகன சோதனையின்போது தப்பிச்சென்று பின்னர் கீழத்தூவல் கிராமம் அருகே மழை சேற்றில் சிக்கி கீழத்தூவல் போலீசாரால் விசாரணைக்கு உட்பட்டது. பின்னர் அம்மா மற்றும் தம்பி ஊர் பிரமுகர் முன்னிலையில் போலீசாரால் விடுவிக்கப்பட்டார். பின்னர் மர்மமான முறையில் இறந்த நிலையில் போலீசார் பிடித்து வைத்த அவர் ஓட்டி வந்த வாகனம் (TN59CJ0208) bajaj NS 200 மதுரை மாவட்டம் மேலூரில் பாத்திமா என்ற பெயரில் உள்ள வாகனம் என தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அது கடந்த அக்டோபர் மாதம் 8ம் தேதி அங்கு திருடப்பட்டுள்ளது. அதன் சிகப்பு கலர் மாற்ற பட்டு (TN05 CD 2641) ஸ்டிக்கர் ஓட்ட பட்டு bajaj NS 200 வெள்ளை நிறமாக மாறி உள்ளது. இதுகுறித்து பாத்திமா அன்றைய தினத்தில் மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். TN05CD2641என்ற மணிகண்டன் ஓட்டிய இருசக்கர வாகனம் எண் சென்னை திருவள்ளூர் மாவட்டம் ஹரிஹரன் என்பவருக்கு சொந்தமான அதே bajaj NS 200 வாகனம் ஆகும். திருடப்பட்ட வாகனம் மணிகண்டன் வசம் வந்தது எப்படி என்பது குறித்து கீழத்தூவல்போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.