”சிவலிங்கத்துக்கு அடியில சிறைப்பட்டு இருக்கேன்னு அம்மன் சொல்லுச்சு” : சிவலிங்கத்தை உடைத்த அறங்காவலர் கைது
’அம்மன் சிவலிங்கத்திற்கு அடியில், நான் சிறைப்பட்டு இருப்பதாக கனவில் அருள்வாக்கு கூறியது’ என சொல்லி சிவலிங்கத்தை உடைத்த அறங்காவலர் ராமு கைது செய்யப்பட்டுள்ளார்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் அழகிய ஊர் பெருமுக்கல். சோழா் கால வரலாற்றுப் பக்கங்களின் பொக்கிஷமாகத் திகழும் கல்வெட்டுகள் நிறைந்த அற்புதத்தலம் ஆகும், புராதன காலத்தில் `சஞ்சீவி மலை' என்று நம் மகரிஷிகளால் போற்றி வணங்கப்பட்ட இந்தத் தலத்தில் உள்ள மலையின் மீது முக்யாசலேஸ்வரா் திருக்கோயில் அமைந்திருக்க, அடிவாரத்தில் தாழக் கோயிலான காமாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
இரண்டு ஆலயங்களும் சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது இந்த நிலையில் கடந்த 23-7-2021 அன்று இரவு பெருமுக்கல் கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரின் மகன் ராமு (63) என்பவர் மலையின் கீழ் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் மூலஸ்தானத்தில் உள்ள சிவலிங்கத்தை உடைத்து குழி தோண்டி உள்ளார். இந்த நிலையில் மறுநாள் அப்பகுதியில் சென்ற கிராம மக்கள் கோவிலின் உள்ளே சிவலிங்கத்தை தொடர்ந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இது குறித்து பிரம்மதேசம் காவல் நிலையத்திற்கு கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் பிரம்மதேசம் காவல் துறையினர் எவ்வித பிரச்சனையும் ஏற்படாதவாறு சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர், இந்த நிலையில் கோவிலில் அறங்காவலராக பணியாற்றிவந்த ராமுவை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் ராமுவின் பதில்கள் முன்னுக்குப்பின் முரணாக கூறப்பட்டதாக காவல் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும் காவலர்கள் அவர்களின் தொடர் விசாரணையை நடத்தி வந்துள்ளனர், சிறிது நேரம் கழித்து ராமு நான் தான் சிவலிங்கத்தை உடைத்தேன் என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் காவலர்கள் உடைத்தர் காரணம் என்னவென்று விசாரணை மேற்கொண்டனர்.
இவர்கள் விசாரணையில் ராம கூறிய பதில்கள் அதிர்ச்சிகரமாக அமைந்தது. சிவலிங்கம் உடைப்பதற்கு முதல் நாள் இரவு அம்மன் தன் கனவில் வந்து, “சிவலிங்கத்திற்கு அடியில் சிறைப்பட்டு இருப்பதாகவும் என்னை மீட்க வேண்டும்” என்றும் கனவில் அருள்வாக்கு கூறியதாக ராமு கூறினார். இதன் காரணமாகவே தான் சிவலிங்கத்தை ஒரு மணி அளவில் உடைத்து குழி தோண்டியதாக கூறினார். பின்பு பிரம்மதேசம் காவல் துறையினர் ராமு மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்த பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். சோழா் கால வரலாற்றுப் பக்கங்களின் பொக்கிஷமாகத் திகழும் பழமை வாய்ந்த சிவலிங்கத்தை உடைத்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சஞ்சீவி மலை பற்றிய தகவல்களை அறிய :
வரலாற்று பக்கங்களின் பொக்கிஷம் முக்தியாலீஸ்வரா் கோயில்!
சிவனுக்கு விரதம் இருக்கும் ஷ்ரவன் மாஸ் எனும் புனித மாதம் - உணவு ரெசிபி!