"பெருமளவு குறைந்த குற்றங்கள்" - சிறப்பாக செயல்பட்ட டிஎஸ்பிக்கு ஆட்சியர் பாராட்டு - எங்கே தெரியுமா?
மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களை பெருமளவு குறைந்ததை அடுத்து அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களை பெருமளவு குறைந்ததை அடுத்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி மற்றும் ஆய்வாளர்களை மாவட்ட ஆட்சியர் பாராட்டியுள்ளார்.
புதிதாக பொறுப்பேற்ற டிஎஸ்பி
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் கடந்த நவம்பர் மாதம் பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து, மாவட்டத்தில் கஞ்சா, சட்டவிரோத மது மற்றும் சாராய விற்பனையை தடுக்க அவர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். சட்டவிரோத மது மற்றும் சாராய விற்பனை, அரசு அனுமதி இன்று செயல்பட மதுபான பார்களுக்கு சீல் என பொறுப்பேற்ற முதல் நாள்முதல் அதிரடி காட்டினார்.

மருத்துவ விடுப்பு
இந்நிலையில் பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக நீண்ட மருத்துவிடுப்பில் சென்றார். இதனால் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனையில் ஈடுப்பட்டுவந்தவர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்நிலையில் மீண்டும் விடுப்பு முடிந்து கடந்த பணியில் சேர்ந்தவர் மீண்டும் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனைக்கு எதிராக தனது அதிரடி நடவடிக்கைகளை துவங்கியுள்ளார். அவர் பொறுபேற்ற ஆறு மாதங்களில் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை கைது செய்தார். மேலும் தொடர்ந்து தனது கைது நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறார். மேலும் சட்டவிரோத மதுபான பார்களுக்கு எதிராகவும் தனது சாட்டையினை சுழற்றினார். இதனால் இவர் பொறுப்பேற்ற சில மாதங்களில் படிப்படியாக போதைப் பொருட்கள் தொடர்பான விற்பனைகள் மற்றும் அது தொடர்பான குற்றங்களும் கணிசமான அளவிற்கு குறைந்து வருகிறது.

ஆட்சியர் பாராட்டு
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுப்பதில் சிறப்பாக செயல்பட்ட மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் கண்காணிப்பாளர் சுந்தரேசன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் அன்னை அபிராமி, ஜெயா அவர்களை நேரில் அழைத்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் பாராட்டி சான்றிதழ்களை வழங்கியுள்ளார்.
யார் இந்த டிஎஸ்பி சுந்தரேசன்..?
காஞ்சிபுரத்தில் நிலம் விற்கும் விவகாரம் தொடர்பாக, ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கஸ்துாரி, 63, கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, அதே மாவட்டத்தைச் சேர்ந்த, ம.தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலர் 65 வயதான வளையாபதி, அ.தி.மு.க., பிரமுகர் 52 வயதான பிரபு, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை காவல்துறையினர், காஞ்சிபுரம் நத்தப்பேட்டையில், பயன்பாட்டில் இல்லாத காவலர் குடியிருப்பில் வைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு இருவரும் மருத்துவ சிகிச்சை பெற்று உடல் நலன் தேறினர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
அதேபோல, சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின், ரவுடிகள் திருவேங்கடம், காக்காதோப்பு பாலாஜி, சீசிங் ராஜா ஆகியோர் காவல்துறையினரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக, மாநில மனித உரிமை கமிஷன் விசாரணையில் இறங்கியது. அங்கு பணியாற்றிய டி.எஸ்.பி., சுந்தரேசன் விசாரித்து, மாநில மனித உரிமைகள் கமிஷனுக்கு முதற்கட்ட அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

காவல்துறையினரின் தவறுகளை சுட்டிக்காட்டிய டிஎஸ்பி
அத்துடன், காவல்துறையினரின் தவறுகளை சுட்டிக்காட்டும் விதமாக, அவர் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த நவம்பர் 10 -ம் தேதி, மாநில மனித உரிமை கமிஷன் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த சுந்தரேசன், மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் அளித்த அறிக்கை எல்லாம், அரசுக்கு பாதகமாக இருப்பதால், இடம் மாற்றப்பட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பணிபுரியும் இடங்களில் தடம் பாதிப்பதோடு, இவரை பணியிடம் மாற்றும் இடங்களிலும் அவர் சோர்ந்து போகாமல் சிறப்பாக செயல்படுவதை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.






















