கூட்டாஞ்சோறு சமைக்க சானிடைசர்: சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!
ஸ்ரீதரன் தன் கையில் கொண்டு வந்திருந்த சானிடைசரை அடுப்பில் ஊற்றி பற்ற வைக்க முயற்சித்தப்பொழுது தான் எதிர்பாராதவிதமாக தீடிரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
திருச்சியில் நண்பர்களுடன் கூட்டாஞ்சோறு சமைப்பதற்காக அடுப்பினைப்பற்ற வைத்த சிறுவன் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று மக்களை இன்னல்களுக்கு ஆளாக்கி வந்த நிலையில் தான், நம்மில் பலர் நோய் எதிர்ப்புசக்தியினை அதிகப்படுத்த பாரம்பரிய உணவுமுறைக்கு மாற ஆரம்பித்தோம். இதோடு மட்டுமில்லாமல் ஊரடங்கு காலத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தாயம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளை எல்லாம் மேற்கொண்டோம். தற்பொழுது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வழக்கம் போல பணிக்கு திரும்பி செல்ல ஆரம்பித்து விட்டோம். ஆனால்,பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் எப்பொழுது பள்ளிக்கு செல்வார்கள் என்பது புரியாத புதிராக தான் உள்ளது. எப்பொழுதும் விளையாடுவதற்கு கூட நேரம் இல்லாத பள்ளி மாணவர்களுக்கு இப்பொழுது விளையாட்டு மட்டும் தான் முதற்பணியாக உள்ளது. எத்தனை நாட்கள் தான் செல்போனில் கேம் விளையாடுவது என நண்பர்களுடன் குளம் ,கிணறு ஆறு போன்ற இடங்களுக்கு குளிக்கச் சென்று எதிர்பாராத விதமாக விபத்தில் உயிரிழக்கின்ற சம்பவமும் அரங்கேறிவருகிறது.
அப்படித்தான், திருச்சியைச்சேர்ந்த 8 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் ஸ்ரீதரன் என்பவர் தனது பக்கத்து வீட்டில் உள்ள நண்பர்களுடன் விளையாடச் சென்றுள்ளார். வழக்கம் போல், கிரிக்கெட்டை விளையாடாமல் சம்பவம் நடந்த நாளன்று கூட்டாஞ்சோறு சமைக்க முடிவு எடுத்துள்ளனர். இதற்காக சிறுவர்கள் அவரவர் வீட்டில் இருந்து கொஞ்சம் அரிசி, பருப்பு, காய்கறிகளை எடுத்து வந்து சமைக்க ஆரம்பித்துள்ளனர். இதற்காக அதே பகுதியில் உள்ள முருகேசன் என்பவரின் வீட்டின் முன்பு கற்களால் அடுப்பைத் தயார் செய்து மண் சட்டியால் சமைப்பதற்காக பல முறை அடுப்பினைப் பற்ற வைக்க முயன்றும் சிறுவர்களால் முடியவில்லை. எனவே சிறுவன் ஸ்ரீதரன் தன் கையில் கொண்டு வந்திருந்த சானிடைசரை அடுப்பில் ஊற்றி பற்ற வைக்க முயற்சித்தப்பொழுது தான் எதிர்பாராதவிதமாக தீடிரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனையடுத்து அருகில் இருந்த சிறுவனின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனைக்கண்டு பயத்தில் மற்ற சிறுவர்கள் சத்தமிட்டுள்ளனர். இந்த சிறுவர்களின் அலறல் சத்தத்தினைக்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் தீயினை அணைத்து பாதிக்கப்பட்ட சிறுவனை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, தொடர் சிகிச்சையளித்தப்போதும், இதில் பலனின்றி சிறுவன் ஸ்ரீதரன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருச்சி கோட்டைப்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதோடு ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் நிலையில் விளையாட்டு அவர்களுக்கு கொஞ்சம் மனநிறைவாகத்தான் இருக்கும். ஆனால் குழந்தைகள் எப்படி விளையாடுகிறார்கள்? என்பதனை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் படிக்க:
தூத்துக்குடியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் கைது; நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்!