தில்லாலங்கடி புருஷன், பொண்டாட்டி... தங்கத்தை உருக்கி செய்த மோசடி
சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த கணவன், மனைவியான வெங்கடேஷ்(46), சகுந்தலா(39) இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
தஞ்சாவூர்: தஞ்சையில் போலி நகைகளை அடகு வைத்து பண மோசடி செய்த சேலத்தை சேர்ந்த தில்லாங்கடி கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் இவர்கள் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பண மோசடி செய்ய திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.
தஞ்சை அருகே ஞானம் நகர் பகுதியில் பசுபதி (55) என்பவர் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 29-ந் தேதி நகைகளை அடகு வைப்பதற்காக 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது அடகு கடையில் பாபநாசம் பகுதியை சேர்ந்த பெண் ஊழியர் மட்டும் இருந்துள்ளார். அந்த பெண் தான் வைத்திருந்த 2 பவுன் சங்கிலியை கொடுத்து அடகு வைத்துக்கொண்டு பணம் வேண்டும் என கேட்டுள்ளார்.
தொடர்ந்து கடையில் இருந்த பெண் ஊழியரிடம் அந்தச் செயினை பெற்றுக்கொண்டு ரூ.87 ஆயிரத்தை கொடுத்துள்ளார். உடன் அந்த மர்மப் பெண் அங்கிருந்து சென்று விட்டார். இதற்கிடையில் கடைக்கு வந்த பசுபதி, அடகு வாங்கப்பட்ட நகையை பரிசோதித்தபோது, அது போலி நகை என்பது தெரியவந்தது.
இதுகுறித்து பசுபதி தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போலீசார் ஞானம் நகர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வுகள் மேற்கொண்டனர். சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த கணவன், மனைவியான வெங்கடேஷ்(46), சகுந்தலா(39) இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதைஅடுத்து போலீசார் வெங்கடேஷ், சகுந்தலா இருவரையும் கைது செய்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. இவர்கள் இருவரும் இதேபோல் பல்வேறு இடங்களில் போலி நகைகளை வைத்து பண மோசடியில் ஈடுபட திட்டம் தீட்டியதும், போலி நகை என்று தெரியாமல் இருப்பதற்காக ஒரு கிராம் அளவிற்கு தங்கத்தை உருக்கி ஊற்றி எடுத்து வந்ததும் தெரிய வந்தது. பின்னர் போலீசார் அவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்தனர். இதுபோன்ற போலி நகைகள் இவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது. கடைகளில் வாங்கினார்களா அல்லது சொந்தமாக தயாரித்தார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இவர்கள் தஞ்சையில் மட்டும் இதுபோன்ற மோசடியை செய்துள்ளார்களா? அல்லது வேறு ஊர்களிலும் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளனராக என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.