மது அருந்தி 2 பேர் உயிரிழப்பு; மதுபாட்டிலில் சயனைட் கலந்திருந்தது உறுதி - தஞ்சை மாவட்ட ஆட்சியர்
தஞ்சாவூரில் கள்ள மது அருந்தி 2 பேர் பலியான சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். இறந்த 2 பேரும் அருந்திய மதுபாட்டிலில் சயனைட் கலந்து இருந்ததாக தகவலும் பரவி வருகிறது.
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கள்ள மது அருந்தி 2 பேர் பலியான சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இறந்த 2 பேரும் அருந்திய மதுபாட்டிலில் சயனைட் கலந்து இருந்தது உறுதி செய்யப்பட்டள்ளது என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மது அருந்தி 2 பேர் உயிரிழப்பு:
தஞ்சாவூர் கீழ அலங்கம் பகுதியில் உள்ள மதுக்கூடத்தில் விற்கப்பட்ட கள்ள மதுபானத்தை அருந்திய கீழவாசலை சேர்ந்த குப்புசாமி, விவேக் உயிரிழந்தனர். இதனிடையே, மதுபானத்தில் உள்ள பிரச்னைதான் இதற்கு காரணம் என்பது தகவல் பரவியது. இதனால், எதிரே இருந்த மீன் வியாபாரிகள், பாஜகவினர், பொதுமக்கள் மதுக்கூடம் முன் திரண்டு மதுக்கூடத்தில் இருந்த பணியாளர்களிடம் தகராறு செய்தனர்.
அப்போது, அங்கு வந்த டாஸ்மாக் மதுக்கடை மேற்பார்வையாளரை பொதுமக்கள் தாக்கியதில், அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. இவரை காவல் துறையினர் மீட்டு அழைத்துச் சென்றனர். இதையடுத்து, விசாரணை நடத்துவதற்காக வந்த டாஸ்மாக் தனி வட்டாட்சியர் ஆர். தங்க பிரபாகரனை பொதுமக்கள் மதுக்கூடத்துக்குள் தள்ளி கதவை மூட முயற்சித்தனர். இதை பார்த்த காவல் துறையினர் சென்று, தகராறில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி, வட்டாட்சியரை மீட்டனர். பின்னர், மதுக்கடையையும், மதுக்கூடத்தையும் காவல் துறையினர் மூடி பூட்டு போட்டனர்.
தொடர்ந்து கிழக்கு காவல் நிலையத்தினர் 174 என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து மதுக்கூட உரிமையாளரும், காங்கிரஸ் கட்சி மாவட்டத் துணைத் தலைவருமான செந்தில் நா. பழனிவேல், மதுக்கூட ஊழியர் காமராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
மதுக்கடைக்கும், பாருக்கும் சீல்:
மேலும், மதுக்கூடத்துக்கு மதுபானம் எப்படி வந்தது என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, இச்சம்பவம் நடந்த டாஸ்மாக் மதுக்கடைக்கும், மதுக்கூடத்துக்கும் கோட்டாட்சியர் (பொ) கோ. பழனிவேல், கலால் வட்டாட்சியர் ஆர். தங்க பிரபாகரன், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வி. சந்திரா உள்ளிட்டோர் முன்னிலையில் நேற்று இரவு சீல் வைக்கப்பட்டது.
இதனிடையே, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குப்புசாமி, விவேக்கின் உடல்கள் நேற்று மாலை பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டன. இருப்பினும் இறந்தவர்களின் சடலங்களை வாங்க குப்புசாமி, விவேக்கின் உறவினர்கள் மறுத்துவிட்டனர்.
சயனைட் கலந்தது உறுதி:
இருவரது குடும்பத்துக்கும் தலா ரூ. 20 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டால் மட்டுமே சடலங்களை வாங்கிச் செல்வோம் எனவும் உறவினர்கள் தெரிவித்து விட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இறந்த 2 பேரின் உறவினர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால், இருவரது உடல்களும் தொடர்ந்து இரவிலும் பிணவறையில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அளித்த பேட்டியில், உயிரிழந்த 2 பேரும் குடித்த மதுபாட்டிலில் மட்டும் சயனைட் கலக்கப்பட்டிருப்பது உறுதி என தெரிவித்துள்ளார். இந்த நிலையில், போலீசசார் இருவரும் தற்கொலை செய்து கொள்ள இந்த முடிவை எடுத்தனரா? அல்லது இருவருக்குள்ளும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து அதற்காக ஒருவருக்கு ஒருவர் அடுத்தவருக்கு தெரியாமல் சயனைடை கலந்தனரா? என்று கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.