கர்ப்பமான காதலி கோடாரியால் வெட்டி கொடூர கொலை.. போலீஸ் வரும்வரை காத்திருந்த இளைஞர்!
இந்த கொலையைச் செய்தவர் 19 வயதான சுமன் யாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் 17 வயது நிரம்பிய அன்ஷிகா திர்கியை திருமணம் செய்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ப்பமாக இருந்த இளம்பெண்ணை காதலன் கோடாரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர சம்பவம் அம்மாநிலத்தில் கும்லா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நவம்பர் 4ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இந்த சம்பவத்தை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் ராய்தி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, இளம்பெண் கொலை செய்யப்பட்ட நிகழ்வு புரானா ராய்தி கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த கொலையைச் செய்தவர் 19 வயதான சுமன் யாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் 17 வயது நிரம்பிய அன்ஷிகா திர்கியை திருமணம் செய்ய வீட்டிற்கு அழைத்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் யாதவ், அன்ஷிகா இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
கோடாரியால் மனைவி கொலை
அன்ஷிகா 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். சத்தீஸ்கரின் தரம்ஜெய்கரில் உள்ள சாந்தி நகரைச் சேர்ந்த அன்ஷிகா, கிட்டத்தட்ட ஒரு வாரமாக பவன் யாதவின் கிராமத்து வீட்டில் தங்கியிருந்துள்ளார். இப்படியான நிலையில் நவம்பர் 4ம் தேதி அதிகாலை முதலே காதல் ஜோடி இருவருமிடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், சுமன் வீட்டில் வைத்திருந்த ஒரு கோடாரியை எடுத்து அன்ஷிகாவை கடுமையாக தாக்கினார்.
இதனை சற்றும் எதிர்பாராத அவர் சுதாரித்து தப்பிப்பதற்குள் பலமாக வெட்டு விழுந்தது. இதில் அன்ஷிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தைக் கண்டு அக்கம் பக்கத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ராய்தி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். ஆனால் வழக்கமாக குற்றம் செய்தவர்கள் அந்த இடத்தில் இருந்து தப்பிக்கவோ அல்லது செய்த தவறை மறைக்கவோ பார்ப்பார்கள்.
போலீசார் வரும் வரை காத்திருந்த சுமன்
இங்கு அனைவரையும் அதிர்ச்சியூட்டும் விதமாக, சுமன் யாதவ் தப்பிக்கவோ அல்லது குற்றத்தை மறைக்கவோ முயற்சிக்கவில்லை. அவர் போலீசார் வரும் வரை வீட்டினுள் காத்திருந்தார். ராய்தி காவல் நிலையப் பொறுப்பாளர் சந்தீப் குமார் யாதவ் தலைமையிலான போலீசார் குழு சம்பவ இடத்திற்கு வந்து சுமன் யாதவை கைது செய்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட அன்ஷிகாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கும்லா சதார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்ற நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதாவது 17 வயதான ஒரு மைனர் பெண்ணை (அன்ஷிகா) காதலித்த நிலையில் திருமணம் செய்வதற்காக வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பது குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தும் என்று சுமன் யாதவ் நினைத்துள்ளார். அதனால் மிகுந்த குற்ற உணர்ச்சியுடனும் பயத்துடனும் இருந்ததால் காதலியுடன் தகராறு ஏற்பட்டு கொலை செய்தேன் என கூறியதாக சொல்லப்படுகிறது.
ஆனால் சுமன் யாதவின் தாய், தனது மகன் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நன்றாகத் தூங்கவில்லை என்றும் போலீசாரிடம் தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






















