புதுச்சேரியில் பங்குச்சந்தை மோசடி: 8 லட்சம் இழப்பு! சைபர் கிரைம் விசாரணை.
புதுச்சேரி அருகே பங்குசந்தை முதலீட்டில் அதிக லாபம் எனக்கூறி ரூ.8.37 லட்சம் மோசடி - போலீசார் விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரி அருகே பங்குசந்தை முதலீட்டில் அதிக லாபம் எனக்கூறி ரூ.8.37 லட்சம் மோசடி, சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பங்குச்சந்தையில் அதிக லாபம் - 8 லட்சம் மோசடி
புதுச்சேரி முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆண் நபரை அறிமுகம் இல்லாத நபர் தனது வாட்ஸ்அப் குழுவில் இணைத்துள்ளார். பின்னர் அவர், பங்குசந்தை முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக்கூறியுள்ளார். இதனை நம்பியவர், ரூ.8.37 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால் முதலீட்டிற்கான லாப தொகையை அவரால் எடுக்க முடியவில்லை. முதலீடு தொகையும் திரும்ப கிடைக்கவில்லை. அதன்பிறகே, தான் மோசடி நபரால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
இதுகுறித்து அவர், புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆன்லைன் போர்ட்டல் மூலமாக புகார் செய்துள்ளார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், புதுச்சேரி வில்லியனூரை சேர்ந்த ஒரு பெண்ணிடம், தனியார் நிதிநிறுவன கடன் அதிகாரி போல் அறிமுகம் இல்லாத நபர் பேசி, குறைந்த வட்டியில் ரூ.2 லட்சம் கடன் தருவதாக கூறியுள்ளார். அதற்கு செயல்முறை கட்டணமாக ரூ.16,499 அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார்.இதனை நம்பிய அந்த பெண், மேற்கண்ட தொகையை அனுப்பியுள்ளார்.
ஆனால் கூறியபடி கடன் தரவில்லை. மாறாக, மேலும் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். அதன்பிறகே தான், ஏமாற்றப்பட்டதை அந்த பெண் உணர்ந்தார். இதேபோன்று, புதுச்சேரி சண்முகாபுரத்தை சேர்ந்த ஆண் நபர், தனியார் ஏசி கம்பெனி கஸ்டமர் கேர் நம்பரை தேடியுள்ளார். அதில் குறிப்பிடப்பட்ட நம்பரை தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் ஏபிகே பைல் அனுப்பியுள்ளார். அதன் மூலமாக தனது சுயவிவரங்களை பதிவிட்டபோது அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.791 திடீரென மாயமாகி விட்டது. மேற்கண்ட புகார்கள் குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




















