மேலும் அறிய
Sister Abhaya Case: சிஸ்டர் அபயா கொலை வழக்கு: பாதிரியார், கன்னியாஸ்திரிக்கு ஜாமின்; தண்டனை தற்காலிக நிறுத்தம்..!
சிஸ்டர் அபயா கொலை வழக்கு: ஆயுள் தண்டனை பெற்ற கேரள பாதிரியார், கன்னியாஸ்திரிக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம் - தண்டனை தற்காலிக நிறுத்தம்!
![Sister Abhaya Case: சிஸ்டர் அபயா கொலை வழக்கு: பாதிரியார், கன்னியாஸ்திரிக்கு ஜாமின்; தண்டனை தற்காலிக நிறுத்தம்..! Sister Abhaya Case Kerala priest nun life imprisonment temporarily suspended Sister Abhaya Case: சிஸ்டர் அபயா கொலை வழக்கு: பாதிரியார், கன்னியாஸ்திரிக்கு ஜாமின்; தண்டனை தற்காலிக நிறுத்தம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/24/8c4c6b934c7a4135f4ae83905f234a58_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாதிரியார்- கன்னியாஸ்திரி
கேரள மாநிலத்தில் 27 ஆண்டுகளாக விசாரணை நடத்தப்பட்ட சிஸ்டர் அபயா கொலை வழக்கு நாட்டையே உலுக்கிய சம்பவமாக இருந்தது. கோட்டயத்தைச் சேர்ந்த ஐக்கரகுந்நு தாமஸ் - லீலா அம்மா ஆகியோரது இளைய மகள் அபயா (19) இறை தொண்டு செய்வதற்காக கன்னியாஸ்திரி ஆகும் லட்சியத்தோடு 1990-ம் ஆண்டு கோட்டையம் கத்தோலிக்க சபையின் கட்டுப்பாட்டிலுள்ள பயஸ் டெந்த் கான்வென்டில் சேர்ந்தார். கன்னியாஸ்திரியாக கான்வெண்டில் வசித்த அபயா கல்லூரியில் சேர்ந்து படித்தும் வந்தார். எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்த கன்னியாஸ்திரி அபயா 1992-ம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி காலையில் கான்வென்ட் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். அபயா கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கான்வெண்ட் நிர்வாகியான கன்னியாஸ்திரி செஃபி என்பவர் கூறிவந்தார். போலீஸும் அதை தற்கொலை வழக்காக முடிக்கப்பார்த்தது. அபயாவின் பெற்றோரும், அவருடன் வசித்த சக கன்னியாஸ்திரிகளும் அவர் தற்கொலை செய்ய வாய்ப்பே இல்லை என உறுதியாக தெரிவித்தனர்.
கிணற்றில் பிணமாக மீட்பதற்கு முந்தைய தினம் சாதாரணமாக சிரித்து பேசிய அபயா திடீரென்று தற்கொலை செய்ய வாய்ப்பு இல்லை என சக கன்னியாஸ்திரிகள் கூறினர். கன்னியாஸ்திரி அபயாவின் ஒரு செருப்பு கான்வெண்ட் சமையலறையில் உள்ள பிரிட்ஜ் அருகே கிடந்தது. மற்றொரு செருப்பு அவரது சடலம் கிடந்த கிணற்றுக்குள் கிடந்திருக்கிறது. அபயா பிரிட்ஜில் இருந்து எடுத்த தண்ணீர் பாட்டில் கீழே கிடந்துள்ளது. பிரிட்ஜ் பாதி திறந்த நிலையில் இருந்தது. அபயாவின் தலையில் அணிந்து இருந்த கன்னியாஸ்திரிகள் அணியும் சமய வஸ்திரம் கதவில் தொங்கிய படி கிடந்தது. அபயாவின் உடலில் நகக்கீறல்களும், தலையில் காயமும் இருந்தன. இதுதான் அபயா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.
![Sister Abhaya Case: சிஸ்டர் அபயா கொலை வழக்கு: பாதிரியார், கன்னியாஸ்திரிக்கு ஜாமின்; தண்டனை தற்காலிக நிறுத்தம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/24/ca5d8f4b1823acb0b302b777cd65baac_original.jpg)
இதனால் வேறு வழி இல்லாத போலீஸார் கான்வெண்டில் திருடச் சென்ற அடைக்கா ராஜூ என்ற திருடனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், "நான் கான்வெண்டில் திருடும் நோக்கத்தில் சென்றேன். ஆனால் வெளியில் இருந்து பாதிரியார் ஒருவர் கான்வெண்டுக்குள் சென்றார். அதனால் திருடவில்லை என்றார். ஆனால், போலீஸாரோ அடைக்கா ராஜூதான் கொலை குற்றவாளி என்ற ரீதியில் அவரை கடுமையாக கொடுமைப்படுத்தினர். போலீஸ் விசாரணை திருப்தி ஏற்படாத நிலையில் பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. சுமார் 27 ஆண்டுகளாக இந்த வழக்கு தொடர்ந்தது. இந்த கொலையை 'சிஸ்டர் அபயா வழக்கு' என கேரளாவை தாண்டி நாடுமுழுவது பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
சி.பி.ஐ விசாரணையின்போது திருடன் அடைக்கா ராஜூ முக்கிய சாட்சியாக மாறினார். சிஸ்டர் அபயாவை கொலை செய்தது மடத்தின் நிர்வாகியான கன்னியாஸ்திரி செஃபி மற்றும் வெளியில் இருந்து சென்ற பாதிரியார் தாமஸ் எம்.கோட்டூர் என தெரியவந்தது. கன்னியாதிரி செஃபி-க்கும் பாதிரியார் தாமஸ் எம்.கோட்டூர் என்பவருக்கும் பாலியல் ரீதியாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. அவர்கள் இருவரும் கான்வெண்டில் நெருக்கமாக இருந்த சமயத்தில், அதிகாலை நேரத்தில் படிப்பதற்காக எழுந்த சிஸ்டர் அபயா தண்ணீர் குடிக்க கிச்சனுக்கு சென்றுள்ளார். அப்போது பாதிரியாரும், கன்னியாஸ்திரியும் நெருக்கமாக இருந்ததை பார்த்துவிட்டார். இந்த விஷயம் வெளியே தெரிந்துவிடும் என்பதால் கோடாரியால் சிஸ்டர் அபயாவின் தலையில் அடித்துள்ளனர். மயங்கிய சிஸ்டர் அபயாவை பாதிரியாரும், கன்னியாஸ்திரியும் சேர்ந்து கான்வெண்ட் கிணற்றில் வீசி கொலை செய்துள்ளனர்.
ஆனால், சிஸ்டர் அபயாவின் செருப்பு, பாட்டில் போன்ற தடயங்களை அழிக்காமல் விட்டுவிட்டதால் இது கொலை என தெரியவந்தது. அதிலும் பாதிரியார் கான்வெண்டுக்குள் சென்றதை திருடன் அடைக்கா ராஜூ பார்த்ததால் அவர் நேரில் கண்ட சாட்சியாக வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த திருவனந்தபுரம் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதி பாதிரியார் தாமஸ் எம்.கோட்டூருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 7 லட்சம் ரூபாய் அபராதமும், கன்னியாஸ்திரி செஃபி-க்கு ஆயுள் தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது. இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
![Sister Abhaya Case: சிஸ்டர் அபயா கொலை வழக்கு: பாதிரியார், கன்னியாஸ்திரிக்கு ஜாமின்; தண்டனை தற்காலிக நிறுத்தம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/24/cfa8845b0e9ac2a29c303e470c18a28f_original.jpg)
இந்த நிலையில் தண்டனையை எதிர்த்து பாதிரியார் தாமஸ் எம்.கோட்டூரும், கன்னியாஸ்திரி செஃபி-யும் ஐகோர்டில் மேல் முறையீடு செய்திருந்தனர். மேல் முறையீட்டு மனுவை கோர்ட் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. எனவே, மேல் முறையீட்டு மனு விசாரணை முடியும் வரை ஜாமின் அளிக்க வேண்டும் என ஐகோர்ட்டில் மற்றொரு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பாதிரியார் தாமஸ் எம்.கோட்டூர், கன்னியாஸ்திரி செஃபி ஆகியோர் 5 லட்சம் ரூபாய் கோர்டுக்கு முன்பணமாக செலுத்த வேண்டும், கேரளா மாநிலத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது, ஜாமின் காலத்தில் வேறு குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடாது என்பது போன்ற நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கியது. மேலும் தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் கோர்ட் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
தமிழ்நாடு
உலகம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion