கொரோனா சிகிச்சை அளித்த ‛பத்தாம் வகுப்பு’ டாக்டர் எஸ்கேப்
பத்தாம் வகுப்பு படித்துவிட்டு இரத்த பரிசாேதனை நிலையம் என்ற பெயரில் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி பெண் டாக்டரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
செங்கம் அருகே பத்தாம் வகுப்பு வரை மட்டும் படித்துவிட்டு இரத்த பரிசோதனை நிலையம் என்ற பெயரில் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவமனையை மருத்துவ அலுவலர் மற்றும் வருவாய் துறையினர் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். .
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் அதிகளவில் போலி மருத்துவர்கள் கிளினிக் மற்றும் சித்த மருத்துவம் என்ற பெயரில் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் பழைய பேருந்து நிலையம் எதிரே நந்தினி பிரியா என்ற இரத்த பரிசோதனை நிலையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ரத்த பரிசோதனை நிலையம் என்பதால் அவர்கள் மீது அதிக சந்தேகப்பார்வை விழுந்ததில்லை. ஆனால் திடீரென அனைத்து நோய்களுக்கும் அலோபதி சிகிச்சையை ரகசியமாக அளித்து வந்துள்ளனர். அதிலும் கொரானா காலத்தில் பலரும் அது தொடர்பான சிகிச்சை அளித்துள்ளனர். இது தொடர்பாக மருத்துவ அலுவலருக்கு புகார் சென்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் அருளானந்தம் தலைமையிலான மருத்துவர்கள் விசாரணை நடத்திய போது அதிர்ந்து போயினர். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த அதன் உரிமையாளர் ரேணுகா, தான் ஒரு எம்.பி.பி.எஸ்., என கூறி, போலியாக அலோபதி மருத்துவம் பார்த்து வந்துள்ளார். ரத்தபரிசோதனை நிலையம் என்கிற பெயரில் உள்ளே மினி ஆஸ்பத்திரி இயங்கியது தெரிந்தது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த அலோபதி மருந்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆய்வு தகவல் முன்கூட்டியே கிடைத்ததால், போலி டாக்டர் ரேணுகா அங்கிருந்து எஸ்கேப் ஆகியிருந்தார். சம்மந்தப்பட்ட பகுதியில் இருந்த அனைவத்து ஆதாரங்களையும் வீடியோ மற்றும் போட்டோ பதிவு செய்த மருத்துவ குழுவினர். ரத்த பரிசோதனை நிலையத்தை பூட்டி சீல் வைத்தனர். மேலும் தப்பியோடிய ரேணுகா குறித்து செங்கம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. தலைமறைவான ரேணுகாவை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க போலி மருத்துவத்ததால் சிலர் பக்கவிளைவுகளுக்கு ஆளாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். தனியார் மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளில் குறைந்தபட்சம் ரூ.300 முதல் ரூ.500 வரை கட்டணம் வசூலிப்பதால் படிப்பறிவில்லாத ஏழைகள் மட்டுமின்றி படித்தவர்களும் கிராமத்தில் உள்ள போலி டாக்டர்களிடம் செல்கின்றனர். இவர்களில் சிலர் ஹோமியோபதி மற்றும் சித்தா மருந்து தயாரிப்பதற்கான படிப்புகளைப் படித்து விட்டு கிராமப்புறங்களில் கிளினிக் தொடங்கி மருத்துவம் பார்த்து வருகின்றனர். இவர்கள் தங்களிடம் சிகிச்சைக்கு வருவோர்க்கு அலோபதி முறையில் மருத்துவம் பார்க்கின்றனர். இப்பகுதியில் அதிக அளவில் போலி மருத்துவர்கள் செயல்படுவதால் அவர்களை கண்டறிந்து போலீசார் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.