வெளிநாட்டிற்கு கடல் குதிரை கடத்தல்... சுறா துடுப்புகளுடன் சிக்கிய இரண்டு பேர்... வனத்துறை அதிரடி
மரக்காணத்திலிருந்து வெளிநாட்டிற்கு 22 கடல்குதிரை தடை செய்யப்பட்ட 34 சுறா துடுப்புகளை கடத்த இருந்த இருவர் கைது.

விழுப்புரம்: மரக்காணத்திலிருந்து வெளிநாட்டிற்கு 22 கடல்குதிரை தடை செய்யப்பட்ட 34 சுறா துடுப்புகளை கடத்த இருந்த இருவரை திண்டிவனம் வனச்சரக அலுவலர்கள் கைது செய்து சிறையிலடைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியிலிருந்து கடல்வாழ் உயிரினமான கடல் குதிரைகள் கடத்தப்படுவதாக தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக்குற்றங்கள் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய போன் கால் மூலமாக புகார் வந்ததை அடுத்து அடுத்து திண்டிவனம் வனச்சரக அலுவலர் புவனேஷ் தலைமையிலான வனச்சரர்கள் எக்கியார்குப்பம் கிராமம் கோனவாயன்குப்பம் குப்பம் அய்யனார்கோவில் பகுதியில் வாகன சோதனை செய்தனர். வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்த கடலூர் மாவட்டத்தை சார்ந்த முகமது இஸ்மாயில் என்பவரின் வாகனத்தில் இறந்த நிலையில் 22 கடல் குதிரை வைத்திருந்தது தெரிய வந்தது. வனச்சரக அலுவலர்கள் முகமதுவிடம் விசாணை மேற்கொண்டதில் கடலூரை சார்ந்த M.H.அகமதுடன் இணைந்து கடல் குதிரை சுறா துடுப்புகள் வெளிநாட்டிற்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அகமதுவின் கைவினை பொருட்கள் விற்கும் கடையில் சோதனை செய்து கடையில் மறைத்து வைத்திருந்த தடைசெய்யப்பட்ட 34 சுறா துடுப்புகள் மற்றும் கடல்குதிரைகளை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட முகமது இஸ்மாயில், அகமது ஆகிய இருவரை கைது செய்து திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடல் குதிரை என்றால் என்ன?
குதிரை போன்ற முக அமைப்பு, குரங்கு வால் போன்று நீண்ட வாலை கொண்ட மீன் இனம் தான் இந்த கடல் குதிரை. இது 6 செ.மீட்டர் நீளம் முதல் 17 செ.மீட்டர் வரை வளரக்கூடியது. 140 கிராம் எடை கொண்டதாக இருக்கும். இந்த உயிரினம் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவையாகும். ஆயுட்காலம் 5 ஆண்டுகள்.
மிகச் சிறிய கண்களை கொண்ட கடல் குதிரைகள் 360 டிகிரியில் அனைத்து திசைகளிலும் கண்களை திருப்பிக் கொள்ளும் திறன் கொண்டது. இது 3 செ.மீட்டர் தொலைவில் உள்ள உணவுகளை கூட உறிஞ்சும் தன்மை கொண்டது. இதன் வால்களை ஒரு கருவியாக கடல் குதிரைகள் பயன்படுத்துகின்றன. இரைகளைத் தேடவும், அவற்றிடம் சண்டை போடவும் சக்தி வாய்ந்த ஆயுதம் போல் பயன்படுகிறது. இதுமட்டுமல்லாமல் கடல் சீற்றம் மற்றும் புயல் காலங்களில் போது, நங்கூரம் போல் பயன்படுகிறது.
கடல் குதிரைகள் கடலுக்கு அடியில் உள்ள சீவீட் என்னும் தாவரம் இருக்கும் இடத்தில் அதிகம் இருக்கும். இந்த தாவரத்தின் இலைகளில் தனது வாலை சுற்றி தலைகீழாகத் தொங்கும். உணவு பொறுத்தவரையில் ஒருநாளைக்கு 3 ஆயிரம் இறால் குஞ்சுகளை உட்கொள்கின்றன. அதேபோல் நண்டுகளுக்குப் பிடித்த உணவாகக் கடல் குதிரைகள் இருப்பதால், அவற்றிடம் இருந்து தப்பித்துக் கொள்ள சீவீட் தாவரத்தில் அடியில் ஒளிந்து கொள்கின்றன.
இனப்பெருக்கத்தில் ஈடுபடுவது மற்றும் முட்டையிடுவதை மட்டும் கொண்டிருக்கும் பெண் கடல் குதிரைகள், முட்டையை ஆண் கடல் குதிரையின் வால்பகுதியில் உள்ள இனப்பெருக்க பைகளில் விட்டு விடும். அன்று முதல் ஆண் கடல் குதிரைகள், ஆறு வாரங்களுக்கு முட்டைகளை பாதுகாத்து குஞ்சு பொரிக்கும். 100 முதல் 200 குஞ்சுகளை பொரிக்கும் போது, பிரசவ வலி ஏற்பட்டு கடலுக்கு அடியில் சோர்ந்து கிடக்கும். குஞ்சுகள் 1செ.மீட்டர் நீளம் இருக்கும்.
இப்படி வியக்க வைக்கும் வாழ்க்கை முறையைக் கொண்ட கடல் குதிரைகளை இன்று அதிகம் வேட்டையாடப்படும் விலங்குகள் பட்டியலில் உள்ளது. ஆண்மை குறைவுக்கு மருந்து தயாரிக்கவும், சில மருத்துவ முறைகளில் பயன்படுத்துவதற்கும் இவை வேட்டையாடப்படுவதாக கூறப்படுகிறது. இதைத் தவிர பவளப் பாறைகளில் அதிகம் வாழும் இந்த உயிரினம் பவள பாறைகள் அழிந்து வருவதாலும் இவை பாதுகாக்க வேண்டிய 16 உயிரின பட்டியலில் இதுவும் ஒன்றாகும்.





















