போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் - விடுதலை செய்ய கோரி மாணவிகள் சாலை மறியல்
’’ஆசிரியர் நல்லவர், அவர் மீது வேண்டுமென்றே பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த புகாரை ரத்து செய்து, அவரை விடுதலை செய்து, மீண்டும் இதே பள்ளியில் பணியமர்த்த வேண்டும்’’
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், வரலாறு பாட ஆசிரியராக, மதுக்கூர் தாலுகா நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (52) பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் 17 வயது பள்ளி மாணவி, கடந்த 17 ஆம் தேதி தேர்வு எழுதிக் கொண்டிருந்த போது, ஹால் சூப்பர்வைசராக இருந்த ராஜ்குமார் மாணவியின் மேஜை அருகே நாற்காலியை போட்டுக் கொண்டு அமர்ந்து, காலால் சீண்டி, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவி வீட்டில் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் மதுக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. மாணவி அளித்த புகார் குறித்து, அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ஜெயா மாணவியிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து பள்ளி ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஆசிரியர் ராஜ்குமார் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ஜெயா, தஞ்சாவூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். நீதிமன்ற உத்தரவின்படி தஞ்சாவூர் சிறையில் ஆசிரியர் ராஜ்குமார் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜ்குமார் மீது, சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் பள்ளிக்கு வந்த மாணவிகள், ஆசிரியர் ராஜ்குமாருக்கு ஆதரவாக, பள்ளி முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மாணவிகள், ஆசிரியர் நல்லவர், அவர் மீது வேண்டுமென்றே பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த புகாரை ரத்து செய்து, அவரை விடுதலை செய்து, மீண்டும் இதே பள்ளியில் பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து முழக்கங்களை எழுப்பினர். சில மாணவிகள், பள்ளிக்கு செல்லும் பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மதுக்கூர் - மன்னார்குடி இடையே போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது. தகவலறிந்ததும் மறியலில் ஈடுபட்ட மாணவிகளிடம் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் கணேஷ், போலீஸ் டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் மற்றும் தலைமை ஆசிரியர், பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஆசிரியர் மீது பொய் புகார் அளிக்கப்பட்டதை ரத்து செய்ய கோரியும், மீண்டும் அதே ஆசிரியர் அதே பள்ளியில் பணியில் அமர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை கேட்டுக் கொண்ட வட்டாட்சியர் இதுகுறித்து உயர் அலுவலர்களிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதனையடுத்து மாணவிகள் கலைந்து சென்றனர். மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால், மதுக்கூர் - மன்னார்குடி சாலையில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.