சேலத்தில் போக்சோ வழக்கில் ஒருவருக்கு 20 ஆண்டு சிறை மற்றொருவர் கைது
சேலத்தில் 8 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகில் உள்ள நீர்முள்ளிக்குட்டையை சேர்ந்தவர் மணிகண்டன் (24). போர்வெல் மோட்டார் பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 3 ஆம் வகுப்பு மாணவியான 8 வயது உள்ள சிறுமியிடம், சோளக்காட்டை சுற்றிக்காட்டுவதாக கூறி அழைத்துச் சென்றார். பின்னர் அந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். வலி தாங்கமுடியாமல் அலறிய அச்சிறுமியின் வாயை பொத்தி, நடந்தவற்றை வெளியே சொல்லக் கூடாது என சத்தியம் வாங்கி உள்ளார்.
=ஆனால் வலி தாங்க முடியால் இருந்த அச்சிறுமி நடந்தவற்றை தாயிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார். காரிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து வாலிபர் மணிகண்டனை போக்சோ வழக்கில் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முருகானந்தம். வாலிபர் மணிகண்டனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 40 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட நிர்வாகம் ரூ. 2.50 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.
சேலம் மாவட்டத்தில் நடந்த மற்றொரு புகாரில் கன்னங்குறிச்சி அடுத்துள்ள சின்னக்கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (35), எம்.பில்., பட்டதாரியான இவர். தனது வீட்டில் டியூசன் சென்டர் நடத்தி வருகிறார். இவரிடம் அப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் டியூசன் படித்து வருகின்றனர். இதில், பக்கத்து வீட்டில் வசித்து வரும் 3 ஆம் வகுப்பு மாணவியான 8 வயது சிறுமியை, கடந்த 3 மாதமாக அவரது பெற்றோர் விக்னேசிடம் டியூசனுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அச்சிறுமியும் தினமும் மாலையில் டியூசனுக்கு வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை டியூசன் சென்ற சிறுமி, சிறிது நேரத்தில் வீட்டிற்கு ஓடி வந்தார். பெற்றோரிடம், டியூசன் ஆசிரியர் விக்னேஷ், தன்னை தேவையில்லாத இடங்களில் பேட் டச் செய்கிறார் என்று தெரிவித்துள்ளார். உடனே பெற்றோரும். அவர்களது உறவினர்களும் டியூசன் ஆசிரியர் வீட்டிற்கு சென்று, விக்னேசை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரை பொதுமக்கள் கடுமையாகத் தாக்கினார். பின்னர், அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், டியூசன் ஆசிரியர் விக்னேசை ஒப்படைத்து, புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் சிவகாமி விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விக்னேசை கைது செய்தார். அவரை சேலம் கோர்ட்டில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் கன்னங்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.