தமிழகத்தில் போக்சோ வழக்கில் முதல் முறையாக திருநங்கைகளுக்கு ஆயுள் தண்டனை
தமிழகத்தில், போக்சோ வழக்கில் திருநங்கைகள் இருவர் தண்டிக்கப்பட்டது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாவட்டம், காக்காபாளையம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் வார விடுமுறை நாளில், வீட்டிற்கு அருகில் வசிக்கும் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். பின்னர் வீட்டிற்கு சென்றபோது வித்தியாசமான முறையில் நடந்துள்ளார். இதைப்பார்த்த பெற்றோர் மகனிடம் விசாரித்தனர். அப்போது, காக்காபாளையத்தை சேர்ந்த கார்த்திக் என்கிற காயத்ரி, முல்லை என்ற இரண்டு திருநங்கைகள் சிறுவனை அவர்களுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. சிறுவன் வேலை செய்து வந்த உணவகத்திற்கு திருநங்கைகள் அடிக்கடி சாப்பிடச் சென்று வந்ததில் அவருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டனர். சம்பவம் நடைபெற்ற அன்று சிறுவனுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து பெற்றோர், தங்கள் மகனிடம், யார் அழைத்தாலும் தனியாகச் செல்லக்கூடாது என புத்திமதி கூறியுள்ளனர். ஆனால் சில நாள்கள் கழித்து, மீண்டும் சிறுவன் வீடு திரும்பவில்லை. காடையாம்பட்டி பகுதியில் சிறுவன் தனியாக சுற்றித்திரிவதாக கிடைத்த தகவலின் பேரில் பெற்றோர் மகனை மீட்டு வந்தனர். காயத்ரி, முல்லை ஆகிய இரண்டு திருநங்கைகள்தான் சிறுவனை மீண்டும் காடையாம்பட்டிக்கு ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்று, அவரிடம் பாலியல் உறவு வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து காக்காபாளையம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, திருநங்கைகள் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, குற்றம்சாட்டப்பட்ட திருநங்கைகள் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூபாய் 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் கோவை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழகத்தில், போக்சோ வழக்கில் திருநங்கைகள் இருவர் தண்டிக்கப்பட்டது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.