Crime: சேலத்தில் போலி செல்போன் இணைப்பகம்; 15 சிம் பாக்ஸ்கள், 700 சிம் கார்டுகள் பறிமுதல்
வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாக மாற்றி மோசடி செய்வதற்காக சட்ட விரோதமாக செயல்பட்ட செல்போன் இணைப்பகம் கண்டுபிடிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகில் உள்ள செல்வா நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில், பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் கடந்த நான்கு மாதங்களாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். அந்த வீட்டில் சிம் பாக்ஸ் என்கிற சட்ட விரோத செல்போன் இணைப்பு பெட்டி மூலம், வெளிநாட்டு செல்போன் அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாக மாற்றி மாபெரும் மோசடியில் ஈடுபட்டு வந்தது, தொலைத் தொடர்புத் துறை அலுவலர்கள் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய உளவுத்துறை அதிகாரிகள் சேலத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் போலி செல்போன் இணைப்பகம் நடந்த இடத்தை கண்டுபிடித்த அவர்கள், கொண்டலாம்பட்டி போலீசார் உதவியுடன் நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அங்கு அந்த மர்ம நபர் வசித்து வந்த அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து தப்பியது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு செல்போன் எண்களை ஹேக்கிங் செய்ய பயன்படுத்தப்படும் 15 சிம் பாக்ஸ்கள் 700 மேற்பட்ட சிம் கார்டுகள் மற்றும் செல்போன்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக 15 சிம் பாக்ஸ் மற்றும் 700 சிம் கார்டு என அனைத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து போலி இணைப்பகம் நடத்தியவர்களுக்கு வலை வீசப்பட்டது. இதில் சேலம் மாநகரில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த, கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த ஹைதர் அலி என்பவரைப் பிடித்து, கொண்டலாம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவர் போலி செல்போன் இணைப்பகம் நடத்தியதை ஒப்புக்கொண்டார். அவருக்கு உடந்தையாக செயல்பட்ட இருவரையும் அவர் அடையாளம் கூறியுள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்த கொண்டலாம்பட்டி காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஹைதர் அலியிடம் மத்திய உளவுத்துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்தில் போலி செல்போன் இணைப்பகம் செயல்பட்டு வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.