Crime: போக்சோ வழக்கில் நடவடிக்கை இல்லை; மாணவியின் தந்தை காவல்நிலையத்தில் தர்ணா
சசிகுமார் மீது கடந்த 5 ஆம் தேதி போக்சோ சட்டம் உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சேலம் மாநகர் களரம்பட்டி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் கடந்த 26 ஆம் தேதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி தற்கொலை காரணம் குறித்து சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவியிடம் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, 'களரம்பட்டி பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்ற இளைஞரும், நானும் காதலித்து வந்தோம். அவ்வப்போது வீடியோ கால் செய்வது வழக்கம். அதன்படி ஒரு முறை வீடியோ கால் செய்த போது தனது உடையை அகற்றுமாறு வற்புறுத்தி அதனை பதிவு செய்து கொண்டார். அதனை வைத்து 15க்கும் முறைக்கு மேல் தன்னிடம் பேசிய வீடியோ கால்களை பதிவு செய்து கொண்டு மிரட்டி வந்தார்.
நாங்கள் காதலிப்பது எனது அப்பா, அம்மாவிற்கு தெரிந்துவிட்டது. அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பெயரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் இரண்டு வீட்டினரையும் அழைத்து 18 வயது ஆனவுடன் திருமணம் செய்து கொள்வதாக ஒப்புதல் அளித்ததோடு பத்திரத்தில் எழுதியும் கொடுத்துள்ளனர். அதன் பின்னர் சசிகுமார் என்னிடம் பேசவில்லை. நான் பலமுறை செல்போனுக்கு தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் எந்தவித பதிலும் இல்லாததால் எனது பெற்றோரிடம் இது குறித்து கூறினேன். அதன்படி சசிகுமார் வீட்டுக்கு சென்ற எனது பெற்றோர்க அவரது பெற்றோரிடம் பேசினர். அப்போது திருமணம் செய்து கொள்ள குடும்பத்தினர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதைத் தெரிந்து கொண்ட நான் தூக்க மாத்திரை உண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேன்” என்றார்.
இதுகுறித்து முழுவதுமாக தெரிந்து கொண்ட பெற்றோர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதன்படி சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சசிகுமார் மீது கடந்த 5 ஆம் தேதி போக்சோ சட்டம் உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். அவரை அங்கிருந்த காவல்துறையினர் சமாதானப்படுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியன் தந்தை கூறுகையில், “எனது குழந்தையை சசிகுமார் என்பவர் ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி வந்துள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. வழக்குப்பதிவு செய்த நிலையில் சசிகுமார் மற்றும் அவரது உறவினர்கள் தினம் தோறும் தங்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகிறார். போக்கோ வழக்கில் இதுவரை நடவடிக்கை எடுக்காத சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டேன். மேலும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வேன்” எனக் கூறினார்.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)