சேலத்தில் கொடூரம்... 2 குழந்தைகள் வெட்டிக்கொலை - வெட்டியது யார்?
அசோக்குமார் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை வெட்டினாரா? அல்லது வேறு யாராவது வெட்டினரா என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் அசோக் குமார். இவருக்கு மனைவி தவமணி (38), மற்றும் குழந்தைகள் வித்ய தாரணி (13), அருள் பிரகாஷ் (5), அருள்குமாரி (10) என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில், புதன்கிழமை காலை அசோக்குமார் வீட்டிற்கு உறவினர்கள் வந்துள்ளனர். அப்போது அங்கு அசோக் குமார், தவமணி மற்றும் மூன்று குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். குழந்தைகள் மூவரும் ரத்த காயங்களுடன் வெட்டுப்பட்ட நிலையில் கிடந்துள்ளனர்.
குழந்தைகள் அருள் பிரகாஷ், வித்ய தாரணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரியவந்தது. பலத்த ரத்த காயங்களுடன் கிடந்த தவமணி மற்றும் குழந்தை அருள்குமாரியை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இருவருக்கும் பலத்த காயங்கள் உள்ளதால் உடனடியாக மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மோகன் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்து வந்த கெங்கவல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து கணவர் அசோக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் அசோக்குமார் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளையும் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. ஆனால், அசோக் குமாருக்கும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அசோக் குமாரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், அடையாளம் தெரியாத இருவர் வீட்டுக்குள் வந்ததாகவும். அவர்கள் மனைவி மற்றும் குழந்தைகளை அரிவாளால் வெட்டியதாக கூறியுள்ளார். அசோக் குமார் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை வெட்டினாரா? அல்லது வேறு யாராவது வெட்டினரா என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சொத்துக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. இரண்டு குழந்தைகள் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

