காவல் ஆய்வாளருக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த காதலிகள்...! - விரைவில் பாய்கிறது துறைரீதியான நடவடிக்கை
’’ஒரு பெண்ணுடன் காவல் ஆய்வாளர் தனிமையில் இருந்த போது மற்றொரு பெண் வந்ததால் இருவரும் முடியை பிடித்து இழுத்து அபாச வார்த்தைகளால் திட்டி சண்டை போட்டு கொண்டனர்’’
சேலம் காவலர் குடியிருப்பில் காவல் ஆய்வாளர் வீட்டிற்கு புத்தாண்டு கொண்டாட வந்த 2 இளம் பெண்கள் ஒரே நேரத்தில் சண்டையிட்டுக் கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை பாய்கிறது.
சேலம் மாநகர காவல்துறையில் சிறப்புப் பிரிவில் 50 வயது கொண்ட நபர் ஒருவர் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் அன்னதானபட்டி காவலர் குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு அவ்வப்போது பல பெண்கள் வந்து செல்வது வழக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு அன்று இளம் பெண் ஒருவருடன் காவல் ஆய்வாளர் தனிமையில் இருந்துள்ளார். அப்போது திடீரென காவல் ஆய்வாளருக்கு தெரிந்த மற்றொரு பெண்ணும் அங்கு வந்துள்ளார். காவல் ஆய்வாளருடன் வேறொரு பெண் தனிமையில் இருப்பதை பார்த்த அவர் கடும் அதிர்ச்சி அடைந்ததுடன், இரண்டு பெண்களும் மாறி மாறி வாக்குவாதம் செய்ததுடன் காவல் ஆய்வாளர் எனக்குதான் சொந்தம் என ஒருவருக்கொருவர் முடியை பிடித்து இழுத்தபடி ஆபாச வார்த்தைகளை பேசி சண்டை போட்டு உள்ளனர். இதனை பார்த்த காவல் ஆய்வாளர் செய்வதறியாது தவித்த நிலையில் அக்கம் பக்கத்தில் இருக்கும் சக காவலர்களின் குடும்பத்தினர் கூடிவிட்டனர். செய்வதறியாது திகைத்த காவல் ஆய்வாளர் சண்டையை நிறுத்திவிட்டு இடத்தை காலி செய்யுங்கள் என்று கூறி சமாதானப்படுத்தி உள்ளார்.
மேலும் பல சுவாரசியமான செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: - "தனிப்பட்ட வாழ்க்கை மோசம்... மாஸ்டர் தந்த ஆறுதல்.. இன்ஸ்டாவுக்கு டாடா.." மாளவிகா மோகனனின் கதை
இதனிடையே அன்னதானப்பட்டி காவலர்கள் குடியிருப்புவாசிகள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சண்டை போட்டு கொண்ட இரண்டு பெண்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் சேலம் மாநகர காவல் ஆணையரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தொடந்து நடத்தப்பட்ட விசாரணையில், புகாரில் சிக்கிய காவல் ஆய்வாளர் திருப்பூர், தூத்துக்குடி மாவட்டங்களில் பணியாற்றிய போது பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததும் சேலத்திற்கு மாறுதலாகி வந்த நிலையில் கடலூரை சேர்ந்த ஒரு பெண்ணிடம் தொடர்பு ஏற்பட்டு அப்பெண்ணுடன் அடிக்கடி வீட்டில் தனிமையில் இருந்ததும் அப்போது தூத்துக்குடியில் தொடர்பில் இருந்த பெண் சேலத்திற்கு காவல் ஆய்வாளர் பார்க்க வந்தபோது இந்த சண்டை நடந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்க சேலம் உதவி ஆணையாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அவர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் மீது துறைரீதியிலான நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பல சுவாரசியமான செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: - 100 ஆண்டுகளாக திருச்சி மக்களை சப்பு கொட்ட வைக்கும் யானை மார்க் மிட்டாய் கடை - காமராஜர் முதல் கருணாநிதி வரை ருசித்த கூடை பூந்தி