Crime : கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. கணவரின் பெற்றோரை எரித்துக்கொன்றுவிட்டு நடித்தது அம்பலம்..
சொந்த மாமனார் மாமியாரை பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் பகுதியில் நடைபெற்ற குற்ற சம்பவம் ஒன்று மிகவும் பதைபதைக்க வைத்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மஞ்சித் சிங்கின் குடும்பம் வசித்து வந்தது. இவருடைய மகன் ரவீந்தர் சிங்கிற்கு மன்தீப் கவுர் என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர்.
தன்னுடைய திருமணத்திற்கு பிறகு ரவீந்தர் சிங் போர்ச்சுகல் சென்றுள்ளார். இதன்காரணமாக அவருடைய மனைவி மன்தீப் கவுருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த மாற்றோரு நபருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த காதல் திருமணத்தை மீறிய பந்தமாக மாறியுள்ளது. இதை தெரிந்து கொண்ட ரவீந்தர் சிங் தன்னுடைய மனைவியை எச்சரித்தார். அத்துடன் அவருடைய மொபைல் போனையும் கைப்பற்றினார்.
எனினும் அதன்பிறகு மன்தீப் கவுர் தொடர்ந்து தன்னுடைய காதலருடன் பேசியுள்ளார். இதற்காக அவர் தன்னுடைய மாமியருடைய மொபைல்ஃபோனையும் பயன்படுத்தியுள்ளார். இதை அறிந்து மருமகள் மன்தீப் கவுரை மாமியார் மற்றும் மாமனார் மஞ்சித் சிங் எச்சரித்துள்ளனர். அவர்களுடைய எச்சரிக்கையை மீறி மன்தீப் கவுர் திருமணத்தை மீறிய பந்தத்தை தொடர்ந்து கொண்டே இருந்துள்ளார்.
இந்த உறவை தடுக்க அவருடைய மாமனார்-மாமியார் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அந்த நடவடிக்கைகளால் எரிச்சல் அடைந்த மன்தீப் கவுர் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக தன்னுடைய காதலருடன் சேர்ந்து ஒரு திட்டத்தை தீட்டியுள்ளார். அதன்படி அவருடைய கணவர் ரவீந்தர் சிங் கடந்த வாரம் வெளியூர் சென்றுள்ளார். அந்த நேரத்தை பயன்படுத்தி கொலை செய்ய இவர்கள் முடிவு செய்ததாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து கடந்த வாரம் ஒருநாள் இரவு தன்னுடைய வீட்டிற்குள் காதலரை அழைத்து மாமனார் மற்றும் மாமியார் ஆகிய இருவரையும் கொலை செய்ததாக கூறப்படுகிறது. அத்துடன் அவர்களின் உடல்களை தீயிட்டு எரித்துள்ளதாக தெரிகிறது. அதன்பின்னர் தங்களுடைய வீட்டிற்குள் அடையாளம் தெரியாத நபர்கள் வந்து கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மன்தீப் கவுர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இறுதியில் அவரும் தன்னுடைய காதலரும் சேர்ந்து கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். அதன்பின்பு அவர்கள் இருவரையும் கைது செய்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னாள் ராணுவ வீரரின் வீட்டிலேயே இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: 'தம்பி! உள்ளே ஒன்னுமில்ல தம்பி.. பீரோவை உடைக்காதே' - திருடனுக்கு லெட்டர் எழுதிய வழக்கறிஞர்!