புதுக்கோட்டையை அதிரவைத்த இரட்டை கொலை; 4 மாதங்களுக்குப் பிறகு இருவர் கைது - துப்புதுலங்கியது எப்படி?
குற்றவாளிகள் யார் என்று 4 மாதங்களாக நடத்திய தீவிர விசாரணையில் கடந்த மே 2ம் தேதி துப்புதுலங்கியது.
புதுக்கோட்டையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இரண்டு பேர் இறந்துகிடந்த வழக்கில் 4 மாதங்களுக்குப் பிறகு துப்புதுலங்கியது.
இரட்டைக் கொலை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி பகுதியில் வசித்துவருபவர் சிகப்பி. அவரது கணவர் ஆறுமுகம் உயிரிழந்துவிட்ட நிலையில், பொறியாளரான தன் மகன் பழனியப்பனுடன் வசித்து வந்தார். கடந்த டிசம்பர் 23ம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவரையும் கொன்றுவிட்டு அவர்கள் அணிந்திருந்த சுமார் மூன்றேகால் பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க 5 தனிப்படையினரை அமைத்து புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவிட்டார்.
தீவிர விசாரணை:
இரண்டு பேரை கொலை செய்தது யார், நகைகளை கொள்ளையடிப்பது தான் நோக்கமா? ஏதேனும் முன்விரோதமா? குடும்பப் பிரச்சனையா? என்ற கோணத்தில் விசாரணை செய்துவந்தனர். சிகப்பி மற்றும் பழனியப்பன் ஆகியோருக்கு இரண்டு வீடுகள் உள்ள நிலையில் இரண்டு வீடுகளும் திறந்து கிடந்துள்ளது. அதனால், இருவரையும் தெரிந்த யாரோதான் இந்த கொலையை செய்திருக்கக் கூடும் என்ற கோணத்திலும் விசாரணை செய்து வந்தனர். எனினும் குற்றவாளிகள் யார் என்று 4 மாதங்களாக நடத்திய தீவிர விசாரணையில் கடந்த மே 2ம் தேதி துப்புதுலங்கியது.
துப்பு துலங்கியது எப்படி?
பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபால் இவ்வழக்கு சம்பந்தமாக விசாரணையில் ஈடுபட்டிருந்தபோது இடைய புதூர் பேருந்து நிறுத்தம் அருகே இருவர் நின்று கொண்டிருந்துள்ளனர். அவர்களது நடவடிக்கைகள் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்ததையடுத்து அவர்களை பிடித்து விசாரணை செய்ததில், ஒருவர் சிங்கம்புணரியைச் சேர்ந்த சக்தி என்பதும், மற்றொருவர் தேவக்கோட்டையைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், சிகப்பி மற்றும் பழனியப்பன் கொலையில் இருவருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது.
இருவர் கைது:
கொத்தனாரான சக்தி பழனியப்பனிடம் கொத்தனாராக பணிபுரிந்துவந்துள்ளார். பணியில் இருந்து விலகிய நிலையில் நகைக்காக பழனியப்பன் மற்றும் சிகப்பி ஆகியோரை திட்டமிட்டு கொன்றது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, இருவரிடமிருந்து தோடு, மோதிரம் உள்ளிட்ட நகைகள் கைப்பற்றப்பட்டது. இருவரையும் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து அந்த கிராம மக்கள் பீதியில் இருந்த நிலையில், குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்த காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவை கிராமமக்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடித்த காவல்துறையினரை வந்திதா பாண்டே ஐபிஎஸ் நேரில் வரவழைத்து வெகுமதிகள் வழங்கி பாராட்டினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்