ஆந்திராவில் நக்சல் பகுதியில் பதுங்கியிருந்த கஞ்சா கும்பல் தலைவனை கைது செய்த புதுவை போலீஸ்
’’தமிழகம், ஆந்திராவிலிருந்து புதுச்சேரிக்கு கஞ்சா வருவது சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க புதுவை போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்’’
நக்சல் பகுதியில் பதுங்கியிருந்து கஞ்சா கும்பல் தலைவனை புதுவை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கஞ்சா கும்பலை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ரெட்டியார் பாளையம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி கஞ்சா விற்பனை செய்ததாக கம்பன் நகரை சேர்ந்த அசோக்குமார் (37) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கஞ்சா கும்பலின் தலைவன் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ராமராஜூ (55) என்பதும் அவரது தலைமையில் புதுவை மாநிலத்துக்கு கஞ்சா சப்ளை செய்யப்பட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்ஷா கோத்ரா உத்தரவின் பேரில் வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுபம் சுந்தர் கோஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் ஆகியோர் தலைமையில் ஏட்டுகள் ராஜூ, உமாநாத், சசிதரன், போலீஸ்காரர்கள் கோவிந்தன், அரிகரன், ராஜவேல் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் விசாகப்பட்டினம் விரைந்தனர்.
அப்போது ராமராஜூ ஆந்திரா-ஒடிசா எல்லை பகுதியான தாமராடு என்ற கிராமத்தில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து உள்ளூர் போலீசாருடன் உதவியுடன் ராமராஜூவை போலீசார் கைது செய்து புதுவை அழைத்து வந்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
மேலும், அரியாங்குப்பம் புறவழிச்சாலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், தர்மபுரியை சேர்ந்த ஜானகிராமன் (21), வைத்திகுப்பத்தை சேர்ந்த ரோகேஷ்குமார் (20), அய்யங்குட்டி பாளையத்தை சேர்ந்த சீனு (20), வில்லியனூரை சேர்ந்த பிரபு (20) ஆகியோர் என்பதும், அவர்கள் அனைவரும் இணைந்து கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவும், ஒரு மோட்டார் சைக்கிளும், 6 செல்போன்களும் பறிமுதல் செய்தனர்.
மேலும் தொடர்ந்து தமிழகம் மற்றும் ஆந்திரா பகுதிகளிலிருந்து புதுச்சேரிக்கு கஞ்சா வருவதை தடுக்க போலிசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. இதற்கான அண்டை மாநில போலீஸாருடன் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். இத்தகைய குற்றங்களை ஒடுக்கவும், முழு நேர கண்காணிப்புக்கு வசதியாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விரைவில் ஆரம்பிக்க இருக்கிறோம். பொதுமக்களை அச்சுறுத்தும் செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட குற்றத்தில் ஈடுபடுவோர் மீது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள்.