வேலை இல்லாத விரக்தியில் இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்
திண்டிவனம், திருவண்ணாமலை, திருச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து திருடப்பட்ட பல வாகனங்கள் என மொத்தம் 22 வாகனங்களை போலீசார் பறிமுதல்

புதுச்சேரி: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் வேலை இல்லாத விரக்தியில் புதுவை, தமிழகத்தில் இருசக்கர வாகனம் திருடி வந்த நிலையில் புதுச்சேரி போலீசாரிடம் சிக்கினார்.
வேலை இல்லாத விரக்தி ; டூ வீலர் திருடன் கைது
புதுச்சேரி பெரியகடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 5 மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் கடந்த ஜூலை மாதம் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, டிஐஜி சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி. (சட்டம் & ஒழுங்கு) கலைவாணன், கிழக்கு எஸ்.பி. ஈஷா சிங் நேரடி மேற்பார்வையில் சிறப்பு குற்றப்பிரிவு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் தலைமையில் போலீசார் திருடனை தேடி வந்தனர்.
சிக்கியது எப்படி ?
இந்நிலையில் கடந்த 11ம் தேதி பெரியகடை போலீசார் அண்ணாசாலை-45 அடி சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாமல் வந்த இருசக்கர வாகனத்தை போலீசார் பிடித்து ஆவணங்களை கேட்டனர். அப்போது, மர்ம நபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறவே போலீசார், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜ துரை (34) என்பதும், புதுச்சேரி அரசு மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி வந்ததாகவும் ஒப்புக்கொண்டனர். பின்னர், போலீசார், அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்நிலையில், பெரியகடை போலீசார், கைது செய்யப்பட்ட ராஜதுரையை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதில், புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் மொத்தமாக 22 இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதாகவும் ஒப்புக்கொண்டார்.
22 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
தொடர்ந்து, அவரிடமிருந்து பெரியகடை காவல் நிலைய பகுதியில் திருடப்பட்ட 6 இருசக்கர வாகனம், ஓதியஞ்சாலை காவல் நிலைய பகுதியில் 2 இருசக்கர வாகனம், செஞ்சி காவல் நிலைய பகுதியில் 1 இருசக்கர வாகனம், கடலூர் என்.டி. காவல் நிலைய பகுதியில் 1 இருசக்கர வாகனம் மற்றும் திண்டிவனம், திருவண்ணாமலை, திருச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து திருடப்பட்ட பல வாகனங்கள் என மொத்தம் 22 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சீனியர் எஸ்.பி. கலைவாணன் கூறுகையில், விழுப்புரத்தை சேர்ந்த ராஜதுரை (34) என்பவர் பி.இ (பயோமெடிக்கல் இன்ஜினியரிங்) படித்து முடித்து, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அங்கு ஏற்பட்ட பிரச்னையில் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
கள்ளச்சாவி மூலம் திறந்து திருட்டு
இதனால் வேலை இல்லாமல் இருந்து வந்ததால் விழுப்புரத்தில் இருந்து பேருந்து மூலம் புதுச்சேரிக்கு வந்து, கடற்கரைக்கு வரும் பொதுமக்களின் இருசக்கர வாகங்களை, கள்ளச்சாவி மூலம் திறந்து திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். பின்னர், திருடப்பட்ட பைக்குகளை தமிழகத்தில் பல்வேறு கிராமங்களில் நம்பர் பிளேட் இல்லாமல் குறைந்த விலைக்கு விற்பனை செய்தும் வந்துள்ளார். இவர் மீது ஏற்கனவே விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் அடிதடி வழக்கு உள்ளிட்ட பல்வேறு நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது என தெரிவித்தார்.






















