(Source: ECI/ABP News/ABP Majha)
Crime: வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான திமிங்கல எச்சம்..! தந்தை, மகன் அதிரடி கைது..
”திமிங்கில உமிழ் நீர் என கூறிய அந்த பொருட்களை எடை பார்த்த போது 2760 கிராம் இருந்துள்ளது. மேலும் சர்வதேச சந்தை மதிப்பில் அதன் விலை 41 லட்சத்து 50 ஆயிரம் என தெரிய வந்துள்ளது”
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே விஸ்வனாதபுரம் பகுதியை சேர்ந்த தங்கச்சன் மற்றும் அவரது மகன் ஆகியோர் வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள திமிங்கல எச்சம் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஹியாம்சுந்தர் தலைமையில் அச்சன்புதூர் தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் மாதவன், தனிப்பிரிவு காவலர் செந்தில்ரமேஷ், அரவிந்த்ராஜ், விக்னேஷ், மாரியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசார் வீட்டை சோதனை செய்து பார்த்தபோது அங்கு தங்கச்சன் மற்றும் வர்கீஸ் ஆகிய இருவரும் இருந்துள்ளனர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணான தகவலை அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலிசார் வீடு முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனையில் ஒரு அறையில் வைத்திருந்த பொருட்களை கைப்பற்றினர். திமிங்கில உமிழ் நீர் என கூறிய அந்த பொருட்களை எடை பார்த்த போது 2760 கிராம் இருந்துள்ளது. மேலும் சர்வதேச சந்தை மதிப்பில் அதன் விலை 41 லட்சத்து 50 ஆயிரம் என தெரிய வந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த போலிசார் தங்கச்சன் மற்றும் அவரது மகன் வர்கீஸ் ஆகிய இருவரையும் கைது செய்து செங்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
தொடர்ந்து இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் அப்பொருள் ஒப்படைக்கப்பட்டது. அதனை பெற்றுக் கொண்ட வனத்துறை அதிகாரிகள் அதனை சோதனை செய்து பார்த்துள்ளனர். அப்போது அது சாம்பிராணி செய்ய பயன்படுத்தப்படும் குந்திரியம் எனப்படும் மரப்பிசின் என கண்டறிந்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக காட்டு பகுதியில் கிடைக்கும் இந்த பொருள் எவ்வாறு அங்கிருந்து எடுத்து வரப்பட்டது.
மேலும் இதில் இந்த இருவரை தவிர வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பல லட்சம் மதிப்புள்ள காட்டு பகுதியில் கிடைக்கும் அரிய பொருளான குந்திரியம் எனப்படும் மரப்பிசினை இருவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்