Coimbatore Gun Shot: கோவையில் விசாரணைக்கு அழைத்துச்சென்ற போலீசார் மீது துப்பாச்சூடு நடத்திய கைதி..
கோவையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கைதி போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Coimbatore Gun Shot: கோவையில் விசாரணைக்கு அழைத்துச்சென்ற போலீசார் மீது துப்பாச்சூடு நடத்திய கைதி.. Prisoner Gun Shot on police in coimbatore what happened inside details here Coimbatore Gun Shot: கோவையில் விசாரணைக்கு அழைத்துச்சென்ற போலீசார் மீது துப்பாச்சூடு நடத்திய கைதி..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/07/03decd72f42b8a256ba20546c6cbc0df1678158585311572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கைதி போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த ரவுடியான சத்தியபாண்டி என்பவர் மீது கோவை, மதுரையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேது மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். அவரை அந்த கும்பல் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தது.
இந்த கொலை சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக ரேஸ் கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் முன்விரோதம் காரணமாக கொலை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனிடையே சத்தியபாண்டி கொலை சம்பவம் தொடர்பாக சஞ்சய் குமார், காஜா உசேன், ஆல்வின், சபூல்கான் உள்ளிட்ட 4 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன் அரக்கோணம் கோர்ட்டிலும், இதேபோல் சஞ்சய் ராஜா என்பவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர்.
முதலில் சஞ்சய் குமார்,காஜா உசேன், ஆல்வின், சபூல்கான் ஆகிய 4 பேரும் கோவைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் கோவை தீத்திப்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை பதுக்கி வைக்க உதவியது தெரியவந்தது. இவர் இருசக்கர வாகன ஒா்க் ஷாப் நடத்தி வந்துள்ளார். உடனடியாக மணிகண்டனை பிப்ரவரி 28 ஆம் தேதி போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இதனையடுத்து சென்னை எழும்பூர் கோர்ட்டில் சரணடைந்த சஞ்சய் ராஜா கோவை அழைத்து வரப்பட்டார். கோவை 3வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை போலீசார் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல் செய்த நிலையில் 5 நாட்கள் விசாரிக்க நீதிபதி அனுமதியளித்தார். தொடர்ந்து மார்ச் 7 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்றைய தினம் இக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சஞ்ஜய்ராஜா மறைத்து வைத்திருந்த தனது கைத்துப்பாக்கியை எடுத்து தருவதாக கூறிய நிலையில், அவரை சம்பவ இடத்திற்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அப்போது துப்பாக்கியை எடுத்து போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதனையடுத்து தற்காப்புக்காக காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டதில் சஞ்சய் ராஜாவுக்கு முட்டியில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கோவை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)