Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
Savukku Shankar: அவதூறு வழக்கில் யூடியூப்பர் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்ய சென்ற நிலையில், வீட்டின் கதவை திறக்க மறுத்ததால் கடப்பாரை கொண்டு கதவை உடைக்க போலீசார் முயற்சித்து வருகிறார்கள்.

சர்ச்சை கருத்தும் சவுக்கு சங்கரும்
பிரபல யூடியூப்பரான சவுக்கு சங்கர் சமூகவலைதளங்களில் பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் சவுக்கு சங்கர் மீது அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் பெண் காவலர்கள் தொடர்பாக சர்ச்சையான கருத்தை தெரிவித்தார். இதனால் தமிழகம் முழுவதும் பெண் காவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் தேனியில் உள்ள ஒரு விடுதியில் வைத்து சவுக்கு கைது செய்யப்பட்டார். அப்போது அவரது அறை மற்றும் காரில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனியாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.
குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கர்
அடுத்தடுத்து சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது கால் தவறி கீழே விழுந்ததில் கையில் காயம் ஏற்பட்டது. ஆனால் போலீசார் தன்னை தாக்கியதால் காயம் ஏற்பட்டதாக சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து பல மாதங்களுக்கு பிறகு குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் சிறையில் இருந்து சவுக்கு சங்கர் வெளியே வந்தார். வெளியே வந்த சவுக்கு சங்கர், சவுக்கு மீடியா என்ற இணையதளம் மூலம் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதில் தமிழக அரசின் செயல்பாடு, அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் தொடர்பாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு வந்தார்.
மீண்டும் சவுக்கு சங்கர் கைது செய்ய போலீஸ் திட்டம்
இந்த நிலையில் தான் இன்று காலை தனது சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட சவுக்கு சங்கர், அதில் மாலதி உள்ளிட்ட எங்களது மொத்த டீமையும் போலீசார் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், தனது வீட்டிற்கு கீழே இரண்டு வேன்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும் தான் வீட்டின் கதவை வழக்கறிஞர்கள் வரும் வரை திறக்க மாட்டேன் என கூறியதாக வீடியோவில் பதிவிட்டிருந்தார். இதன் காரணமாக தனது வீட்டிற்கு வெளியே போலீசார் காத்திருப்பதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து அங்கு வந்த சவுக்கு சங்கரின் வழக்கறிஞர்களிடம் கைது தொடர்பான காரணத்தை போலீசார் தெரிவித்தனர்.
கதவை திறக்காத சவுக்கு சங்கர்- கடப்பாரை மூலம் கதவை உடைக்க திட்டம்
இருந்த போதும் சவுக்கு சங்கர் தனது வீட்டின் கதவை பல மணி நேரங்களாக திறக்காமல் தொடர்ந்து வீட்டிற்குள் இருந்துள்ளார். இதனையடுத்து சவுக்கு சங்கரிடம் பலமுறை கதவை திறக்க போலீசார் அறிவுறுத்தியும் கதவை திறக்கவில்லை.
இந்த நிலையில், போலீசார் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கடப்பாரையை கொண்டு வீட்டின் கதவை உடைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக தீயணைப்பு துறையினர் கடப்பாரையோடு சவுக்கு சங்கர் வீட்டிற்கு வந்துள்ளனர். இது தொடர்பான வீடியோவையும் சவுக்கு சங்கர் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடப்பாறைகளோடு தீயணைப்பு வீரர்கள் வந்து கதவை உடைக்க இருக்கின்றனர். pic.twitter.com/QQYuLAt0Zd
— Savukku Shankar (@SavukkuOfficial) December 13, 2025
வழக்கின் பின்னனி என்ன.?
ரெட் அண்ட் ஃபாலோ என்ற திரைப்படம் தொடர்பாக தனது வீடியோவில் அவதூறு பரப்பும் வகையில் சவுக்கு சங்கர் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆயிஷா சாதிக், கடந்த ஜூன் மாதம் சவுக்கு சங்கர் அலுவலகத்திற்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது அங்கிருந்த சவுக்கு சங்கர், மாலதி மற்றும் ஊழியர்கள் தன்னை மிரட்டி 10 லட்சம் கேட்டதாகவும், தன்னிடம் இருந்த 2 லட்சம் ரூபாயை அபகரித்து கொண்டு தன்னை தாக்கியதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் ஆதம்பாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி விளக்கம் கேட்ட நிலையில், இன்று காலை சவுக்கு சங்கர் வீட்டிற்கு அவரை கைது செய்ய சென்றது குறிப்பிடத்தக்கது.





















