Crime: வந்தவாசி அருகே ஒடும் பேருந்தில் நகை திருட முயற்சி - 2 பெண்களிடம் போலீசார் விசாரணை
வந்தவாசி அருகே வந்த பேருந்தில் பயணியிடம் 10 பவுன் நகை பேக்கை திருட முயன்ற 3 பெண்களில் 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய பெண்ணை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
சென்னை கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் சிவம். இவருடைய மனைவி அபிரின் வயது (25). இவர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தம்பதி இருவரும் போளூர் செல்லும் அரசு பேருந்தில் பயணித்துள்ளனர். அப்போது வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமம் அருகே பேருந்து வந்தகொண்டு இருந்த போது 6 வயது மற்றும் 1 வயது பெண் குழந்தையுடன் இருந்த மூன்று பெண்களில் ஒருவர் அபிரின் வைத்திருந்த பேக்கை திறந்து பார்த்துள்ளார். அப்போது இதனை கவனித்த அபிரின், எதற்காக என்னுடைய பேக்கை திறந்து பார்க்கிறாய் என கேட்டுள்ளார். இதனால் சுதாரித்துக் கொண்ட 6 வயது குழந்தையுடன் இருந்த பெண் பேருந்து சென்றுகொண்டு இருந்த போதே சாலையில் வேகத்தடை வந்தவுடன் பேருந்தில் இருந்து திடீரென கீழே இறங்கிவிட்டார். பேருந்தை பின்தொடர்ந்தது வந்த இருசக்கர வாகனத்தில் அந்த பெண் குழந்தையுடன் தப்பித்து விட்டார்.
அதனைத் தொடர்ந்து கைக்குழந்தையுடன் இருந்த இரண்டு பெண்களை பேருந்தில் இருந்த பயணிகள் சிறை பிடித்து வந்தவாசி வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த துணை ஆய்வாளர் வரதராஜன் தலைமையிலான காவல்துறையினர் விரைந்து பேருந்து இருந்த இடத்திற்கு வந்து கை குழந்தையுடன் இருந்த இரண்டு பெண்களையும் மீட்டு ஆட்டோவில் வந்தவாசி மகளிர் காவல் நிலையத்தில் கொண்டு சென்றனர். அங்கு துணை ஆய்வாளர் சாந்தி மற்றும் வரதராஜ் ஆகியோர் அந்த பெண்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இரண்டு பெண்களும் திருச்சி, சேலம் என முகவரிகளை மாற்றி மாற்றி தெரிவித்து காவல்துறையினரை ஏமாற்றியுள்ளனர். மேலும் இருவரிடம் இருந்த ஆதார் அட்டையை காவல்துறையினர் வாங்கி பார்த்தனர். ஆதார் எண்களை பார்த்த போது இரண்டுமே ஒரே எண் கொண்டதாகவும் படங்களை மாற்றி வைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. முகவரி ஆதார் எண் அனைத்தும் தவறாக உள்ளதால் இவர்கள் பல்வேறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகமடைந்தனர்.
உடனடியாக கைரேகை பதிவு செய்து மாவட்ட மாநில குற்றப்பிரிவு காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் 6 வயது பெண் குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் தப்பிய பெண் யார் என்றும் இரு சக்கர வாகனத்தில் பேருந்தை பின் தொடர்ந்து வந்த நபர் இவர்களது உறவினர்கள் தானா என காவல்துறையினர் கருதுகின்றனர். இதனால் அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் 6 வயது குழந்தையை பேக் மீது அமர வைத்து அதனை பாவாடையால் பேக்கை மறைத்து திருடும் தொழிலில் ஈடுபட்டு வரும் கும்பல் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் பிடிபட்டவர்களில் ஒரு பெண்ணிடம் உள்ள ஆறு மாத கைக்குழந்தை எந்த மருத்துவமனையில் பிறந்தது என காவல்துறையினர். விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.