“நம்மை கொலை செய்து விடுவார்கள்”; முதலில் முந்திக்கொண்ட குற்றவாளி; போலீஸிடம் சிக்கியது எப்படி?
Chengalpattu News: நாம் இந்த சுற்றுவட்டார பகுதிகளில் தலைவனாக (டான்) அமரவேண்டும் என்பதற்கு திட்டம் தீட்டி வந்துள்ளனர்.
பாமக நிர்வாகி காளி கொலை வழக்கில் சிறைக்கு சென்று திரும்பிய நபர் காளியின் உறவினரை கொலை செய்ய திட்டம் தீட்டி போலீசாரிடம் சிக்கினார்.
வன்னியர் சங்க நிர்வாகிகள் கொலை
செங்கல்பட்டு (Chengalpattu News): செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த காட்டூர் பகுதியை சேர்ந்தவர் காளி என்கிற காளிதாஸ் (39). வன்னியர் சங்க மாவட்ட நிர்வாகியான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மறைமலைநகரில் டீக்கடையில் வைத்து பகலில் கொடூரமான முறையில், கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கல்பட்டு பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏரியாவில் யார் தாதா ?
இந்நிலையில் காளி கொலை வழக்கில் சிறையில் இருந்த நபர்கள் ஒவ்வொருவராக சிறையில் இருந்து வெளியில் வருகின்றனர். அதில் ஒரு நபரான சிங்கபெருமாள் கோயில் பகுதியை சேர்ந்த துலுக்கானம் என்பவரது மகன் லோகேஷ் என்கிற கபாலி (30) என்பவர் காளியை கொலை செய்ததால் காளியின் உறவினர்கள் நம்மை கொலை செய்து விடுவார்கள். அதனால் காளியின் உறவினர் யாரையாவது கொலை செய்து நாம் முந்திக்கொண்டு அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி அவர்களை கொலை செய்ய திட்டமிட்டனர்.
நாம் இந்த சுற்றுவட்டார பகுதிகளில் தலைவனாக (டான்) அமரவேண்டும் என்பதற்கு திட்டம் தீட்டி வந்துள்ளனர். அதற்கான ஸ்கட்ச் போடுவதற்காக சுற்றி திரிந்துள்ளதாக ரகசிய தகவல் மறைமலைநகர் காவல்நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் சுற்றி வந்தனர்.
கீழே விழுந்து கால் முறிவு
சிங்கப்பெருமாள் கோயில் அருகே பதுங்கியிருந்த லோகேஷை போலீசார் நெருங்கி வருவதை அறிந்த லோகேஷ் போலீசாரை கண்டதும் சிங்கபெருமாள் கோயில் அருகே உள்ள காட்டுப்பகுதியில் சகட்டு மேனிக்கு தாறுமாறாக ஓடியுள்ளார். போலீசாரும் சலிக்காமல் அவரை துரத்தினர். தப்பியோடிய லோகேஷ் ஒரு மரத்தின் மீது மோதி அருகில் உள்ள பாராங்கல்லில் கால்சிக்கி காலில் அடிபட்டது. அவரை பிடித்த போலீசார் அவருக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இவர் மீது கொலை கொலைமுயற்சி என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவ்வப்பொழுது செங்கல்பட்டு பகுதியில் இது போன்ற கொலை சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கொலை சம்பவம் நடைபெறாமல் இருந்து வருகிறது. தற்பொழுது ரவுடிசம் செங்கல்பட்டு பகுதியில் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.