இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற பிரபல யூடியூபர் வீட்டில் 2 ஆவது நாளாக சோதனை - பென் டிரைவ் சிக்கியது
பிரபல யூடியூபரான படகு உரிமையாளர் குணசீலன் வீட்டில் 2 மணி நேரத்திற்கும் மேலாக சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை. மேலும் ஒரு படகு, இரண்டு லேப்டாப்புகள், பென்டிரைவ், கேமரா உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் சிக்கியது
நாகை துறைமுகம் அருகே கீச்சாங்குப்பம் ஆற்றுப்பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக கஞ்சா கடத்தப்படுவதாக நாகை சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்குமாருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடந்த 10 நாட்களாக நாகை மாவட்டத்தில் பல்வேறு கடற்கரையோரப் பகுதிகளிலும் நாகப்பட்டினம் துறைமுகம் மற்றும் கீச்சாங்குப்பம் பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு கீச்சாங்குப்பம் ஆற்று ஓரத்தில் சந்தேகத்திற்கு இடமான நிலையில் நான்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் மீன்பிடி பைபர் படகில் பெரிய அளவிலான பொட்டலங்களை படகின் ஐஸ்பெட்டியில் ஏற்றிக் கொண்டு இருந்தனர். இதனைக் கண்ட சுங்கத்துறையினர் அதிரடியாக படகை சுற்றி வலைத்தனர்.
இதனை கண்ட கடத்தல்காரர்கள் 4 பேர் படகிலிருந்து ஆற்றில் குதித்து தப்பி ஓடினர். இதனையடுத்து படகில் சோதனையிட்ட அதிகாரிகள் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். படகில் பத்து பெரிய அளவிலான பொட்டலங்களில் இருந்த 280 கிலோ கஞ்சாவை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து.கடத்தலுக்கு பயன்படுத்திய நான்கு இரு சக்கர வாகனம் மற்றும் பைபர் படகையும் கைப்பற்றிய சுங்கத்துறையினர் தப்பி ஓடிய நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு நாகை மீனவன் என்கிற யூட்யூப் சேனல் நடத்தும் மீனவர் குணசீலனுக்கு சொந்தமானது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட படகு மற்றும் இருசக்கர வாகனங்கள் யாருடையது என்பது குறித்து ரகசிய விசாரணை மேற்கொண்டனர். இதில் நாகை சேவாபாரதியைச் சேர்ந்த சதீஷ், கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த குணசீலன், தாமரைச்செல்வன், சிவசந்திரன் என்பது தெரியவந்தது.
இதைதொடர்ந்து நாகை சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்நாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கழுகாசலம், பாலமுரளி, ரமேஷ், சிவக்குமார், கஜேந்திரன் ஆகியோர் 5 குழுக்களாக பிரிந்து 35 பேர்கள் ஒரே நேரத்தில் 4 பேர்களின் வீடுகளுக்கு சென்று நேற்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடத்திய சோதனையில் 4 பேர்களின் வீடுகளில் இருப்பவர்களிடம் ஆதார் உட்பட அடையாள அட்டைகளை வாங்கி துருவி, துருவி விசாரணை நடத்தினர். இதில் கடத்தலில் தொடர்புடைய 4 பேரும் எங்கு தப்பி சென்றனர். இதற்கு முன்பு இதே போல் வேறு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்தும் உறவினர்களிடம் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
படகு உரிமையாளர் குணசீலன் வீட்டில் இரண்டாவது நாளாக வந்த சுங்கத் துறை உதவி ஆணையர் செந்தில்நாதன் தலைமையில் சுங்கத்துறை அதிகாரிகள் அங்கு மீனவ கிராம முக்கியஸ்தர் மற்றும் பஞ்சாயத்துகள் முன்னிலையில் இன்று மீண்டும் வீட்டிற்குச் சென்று சோதனை மேற்கொண்டனர் அப்போது சமையலறை, படுக்கையறை, பீரோ, பெட்டிகள், பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தேடினர். இந்த சோதனையின்போது படகு உரிமையாளர் குணசீலன் வீட்டில் இரண்டு லேப்டாப்கள், பென்டிரைவ், மெமரி கார்டு, தண்ணீரிலும் எடுக்கும் கேமரா, லென்ஸ், வங்கி புத்தகங்கள், உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதனிடையே கஞ்சா கடத்தல் வழக்கில் கல்லார் பகுதியில் மேலும் ஒரு படகை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் படகின் உரிமையாளர் பாக்யராஜை சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தலைமறைவான கும்பல் குறித்து துருவித்துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கைக்கு சர்வதேச மதிப்பில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா கடத்த முயன்ற பிரபல நாகை மீனவன் யூடியூபர்ஸ் வீடுகளில் இரண்டு நாளாக சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது மீனவ கிராமங்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.