கரூரில் அரசு பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து - பயணிகள் படுகாயம்
கரூர் பேருந்து நிலையத்தின் பின்பகுதி வழியாக வெளியே வந்து கொண்டிருந்த போது, பெங்களூரில் இருந்து கரூரை நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
அதிகாலையில் கரூர் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மீது, தனியார் ஆம்னி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில், ஆம்னி பேருந்து ஓட்டுனருக்கு கால் முறிந்தது. 5 பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
கரூர் பேருந்து நிலையத்தில் இன்று அதிகாலை சேலத்தில் இருந்து கரூர் வழியாக, திண்டுக்கல் வரை செல்லும் அரசு பேருந்தானது, கரூர் பேருந்து நிலையத்தின் பின்பகுதி வழியாக வெளியே வந்து கொண்டிருந்த போது, பெங்களூரில் இருந்து கரூரை நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்தின் முன் பகுதி மற்றும் அரசு பேருந்து பின் பகுதி அப்பளமாக நொறுங்கின.
ஆம்னி பேருந்தை இயக்கி வந்த ஓட்டுநர் பாண்டியன் என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. மேலும், அரசு பேருந்தில் பயணம் செய்த ஐந்து பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரண்டு பேருந்துகளையும் இயக்கி வந்த ஓட்டுநர்கள், நடத்துனர் மற்றும் பயணிகள் விபரம் குறித்தும், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர். கரூர் பேருந்து நிலையம் அருகில் அரசு பேருந்து மீது, தனியார் ஆம்னி பேருந்து மோதி அதிகாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்