லிஃப்ட் கேட்டு தமிழகத்திற்குள் எண்ட்ரி: லாட்ஜில் தங்கி வழிப்பறி: சிக்கிய வடமாநிலத்தவர்களின் திடுக்கிடும் பின்னணி!
சாலைகளில் சக மனிதர்களோடு மனிதர்களாக உலா வந்தபடி திடீரென கண் இமைக்கும் நேரத்தில் நகை பறிப்பு, வழிப்பறி கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தி விட்டு அன்று இரவு லாட்ஜ்களில் தங்குவார்கள்
விழுப்புரம் பகுதியில் தொடர் வழிப்பறி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். கைதான அவர்களிடமிருந்து ரூ.6½ லட்சம் மதிப்புள்ள நகை, பணம், பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் நகர பகுதிகளில் கடந்த சில மாதமாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு, வங்கிகளில் இருந்து பணம் எடுத்துக்கொண்டு வெளியே வருபவர்களின் கவனத்தை திசைதிருப்பி பணத்தை பறித்துச்செல்வது போன்ற குற்றச்செயல்கள் நடந்து வந்தன. இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாவட்ட எஸ்பி தீபக்சிவாச் உத்தரவின்பேரில், விழுப்புரம் உட்கோட்ட டிஎஸ்பி சுரேஷ் மேற்பார்வையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ரேவதி, உதவி ஆய்வாளர்கள் ஆனந்தராசன், பாண்டியன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனை
இந்த தனிப்படை போலீசார், கடந்த சில நாட்களாக விழுப்புரம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் தனிப்படை போலீசார், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை சந்தேகத்தின்பேரில் மடக்கிப்பிடித்து விசாரித்ததில் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரிந்தது.
விசாரணையில் சிக்கிய 3 பேர்... யார் இவர்கள் ?
மேலும் அவர்களிடம் போலீசார் விசாரித்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அவர்கள் 3 பேரையும் மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவர்களிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் 3 பேரும், உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா தாலுகா ராய்ப்பூர் பகுதியை சேர்ந்த நசீர் மகன் சதாப் (வயது 35), முரதாபாத் மாவட்டம் கஜிபுரா பகுதியை சேர்ந்த அனிஸ் மகன் இர்பான் (42), புதுடெல்லி ராஜீவ் நகரை சேர்ந்த அமீர் ஹுசைன் மகன் அலாவுதீன் என்கிற அலி (27) என்பது தெரிந்தது.
மேலும் விசாரணையில், இவர்கள் 3 பேரும் கடந்த 3.8.2023 அன்று விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் உள்ள டீக்கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த விக்கிரவாண்டி ஆசூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் இருசக்கர வாகன பெட்டியை திறந்து அதிலிருந்த ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்தை கொள்ளையடித்ததும், கடந்த 6.4.2024 அன்று மாலை விழுப்புரம் பாப்பான்குளம் சிவன் கோவில் அருகே நடந்துசென்ற விழுப்புரம்- சென்னை மெயின்ரோடு ஆர்.பி. நகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி கீதா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துச்சென்றதும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் காமராஜர் வீதியில் உள்ள ஒரு நகை கடையில் நகை வாங்குவதுபோல் நடித்து அங்கிருந்த ஊழியர்களின் கவனத்தை திசைதிருப்பி 13 பவுன் நகையை அபேஸ் செய்திருப்பதும் தெரியவந்தது.
தங்க நகை, பணம் பறிமுதல்
இதையடுத்து சதாப், இர்பான், அலாவுதீன் என்கிற அலி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம், 3 செல்போன்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.6½ லட்சமாகும். பின்னர் கைதான 3 பேரையும் போலீசார், விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது தமிழகத்தில் கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வழிப்பறி, கொள்ளை வழக்குகளும் மற்றும் விஜயவாடா, குண்டூர், டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட இடங்களிலும் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. விழுப்புரம் பகுதியில் தொடர் வழிப்பறி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளையை அரங்கேற்றுவது எப்படி? விசாரனையில் வந்த திடுக்கிடும் தகவல்
கைதான சதாப், இர்பான், அலாவுதீன் ஆகிய 3 பேரும், தங்கள் மாநிலத்தில் இருந்து லாரிகளில் லிப்ட் கேட்டு தமிழகத்திற்குள் வருவார்கள். இவர்கள் சேலம், ஒசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடிக்கொண்டு அதன் மூலம் பல்வேறு இடங்களுக்கு சென்று சாலைகளில் நடந்து செல்லும் பெண்களிடம் நகைகளை பறித்துச்செல்வது, வங்கிகளில் இருந்து பணம் எடுத்துக்கொண்டு வெளியே வருபவர்களிடம் நைசாக பேச்சுக்கொடுத்து அவர்களின் கவனத்தை திசைதிருப்பி பணத்தை கொள்ளையடிப்பது, மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் தனியாக செல்பவர்களை மிரட்டி வழிப்பறி செய்வது உள்ளிட்ட பலவித குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளனர். அவ்வாறு வழிப்பறி, கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு திருட்டு மோட்டார் சைக்கிளை சாலையோரம் ஏதேனும் ஒரு பகுதியில் நிறுத்திவிட்டு யாருக்கும் சந்தேகம் வராத அளவிற்கு பஸ் மூலமோ அல்லது ரெயில் மூலமோ சொந்த மாநிலத்திற்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
லாட்ஜ்களில் தங்கி நோட்டமிடும் கொள்ளையர்கள்
விழுப்புரத்தில் பிடிபட்டுள்ள 3 கொள்ளையர்களும் கடந்த சில மாதங்களாக விழுப்புரம் பகுதியில் உள்ள வெவ்வேறு லாட்ஜ்களில் அறை எடுத்து தங்கியிருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் திருட்டு மோட்டார் சைக்கிள் மூலம் சாலைகளில் சக மனிதர்களோடு மனிதர்களாக உலா வந்தபடி திடீரென கண் இமைக்கும் நேரத்தில் நகை பறிப்பு, வழிப்பறி கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தி விட்டு அன்று இரவு லாட்ஜ்களில் தங்குவார்கள். குறிப்பிட்ட அளவிற்கு நகை, பணத்தை கொள்ளையடித்ததும் லாட்ஜ் அறைகளை காலி செய்துவிட்டு நைசாக சொந்த மாநிலத்துக்கு சென்று விடுவதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.