ஒரே பகுதியை குறிவைக்கும் இரவு நேர திருடர்கள்.. அச்சத்தில் தூங்காவனமாக மாறிய நெல்லை கிருபா நகர்..
நள்ளிரவில் மேல்சட்டை இன்றி கால் சட்டை மட்டும் அணிந்து, முகத்தில் மப்ளர், கையில் கம்புடன் வீடு வீடாக திருட வரும் மர்ம நபர்கள் ! அச்சத்தில் தூங்காவனமாக மாறிய நெல்லை கிருபா நகர் குடியிருப்பு பகுதி
![ஒரே பகுதியை குறிவைக்கும் இரவு நேர திருடர்கள்.. அச்சத்தில் தூங்காவனமாக மாறிய நெல்லை கிருபா நகர்.. Night time thieves targeting the same area..! The people of Kirupa Nagar in Tirunelveli have become sleepy in fear! ஒரே பகுதியை குறிவைக்கும் இரவு நேர திருடர்கள்.. அச்சத்தில் தூங்காவனமாக மாறிய நெல்லை கிருபா நகர்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/17/48234db6410e8b91094a5468389d52851710658598491571_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நெல்லை மாநகரப் பகுதியான பாளையங்கோட்டையில் இருந்து சீவலப்பேரி செல்லும் சாலையில் கீழநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கிருபாநகர். மாநகராட்சியின் எல்லையில் இருந்து 2 கி.மீட்டர் தூரம்தான். இதன் காரணமாகவே பாளையங்கோட்டையில் இருந்து சொந்த வீடு கட்டிக் குடியேறும் ஆசையில் கிருபா நகர் பகுதியில் புதிய வீடு கட்டி குடியேறியவர்கள் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்து உள்ளது என்கின்றனர். குறிப்பாக 10 வருடங்களுக்கு முன்பு 100 வீடுகள் வரை இருந்த கிருபாநகரில் கடந்த 5 வருடங்களில் மட்டும் 250 வீடுகள் வரை புதிதாக கட்டப்பட்டு உள்ளது.
20 வருடங்களுக்கும் மேலாக இந்த பகுதியில் மக்கள் குடியிருப்புகள் இருந்து வருகிறது. ஆனால் இதுநாள் வரை திருட்டு பயம் என்பது இல்லாமலிருந்த கிருபா நகர் மக்களுக்கு, கடந்த இரண்டு மாத காலத்தில் அதிக வீடுகளில் நடந்த திருட்டு முயற்சி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அடுத்தடுத்து அமைந்திருக்கும் 6 வீடுகளில் திருட்டு முயற்சியும், ஆட்கள் பார்த்து சத்தம் போட்டதும் மர்ம நபர்கள் ஓடி விடுவதும் தொடர்கதையாகி வருவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மீண்டும் மீண்டும் இரவு நேரங்களில் திருடர்கள் வருவது தொடர் கதையாக உள்ளது என்கின்றனர் கிருபா நகர் மக்கள்.
குறிப்பாக மேல் சட்டை இல்லாமல், கால் சட்டை மட்டும் அணிந்து கொண்டு முகத்தில் மஃப்ளர் அணிந்து கொண்டு வருவதாக கூறுகின்றனர் பொதுமக்கள். இரண்டு பேர் அல்லது மூன்று பேராக வரும் இவர்கள் பைக் கொண்டு வருகின்றனர். வீடுகளுக்குள் ஏறி குதிக்கும் திருடர்கள், வீட்டில் உள்ளவர்கள் கண் முழித்து சத்தம் கொடுத்து விட்டால் உடனடியாக தப்பித்து தூரத்தில் பைக்கில் காத்து நிற்கும் நபருடன் சேர்ந்து தப்பித்து விடுகின்றனர். இத்தனைக்கும் கிருபா நகரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தான் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையமும் அமைந்துள்ளது. கடந்த ஒரு வார காலமாகவே கிருபா நகரை குறி வைத்து தொடரும் கொள்ளை முயற்சிகள் குறித்து பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டோம். காவல்துறையினரும் தேடிப் பார்த்தனர். ஆனாலும் இதுவரை காவல்துறையின் கையில் கிடைக்கவில்லை. நள்ளிரவு நேரங்களில் காவல்துறையின் ரோந்து பணிகளை அதிகப்படுத்தினால் திருடர்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்கின்றனர் கிருபா நகர மக்கள்.
கிருபா நகர் பாளையங்கோட்டை நகரில் இருந்து அருகில் இருந்தாலும் புதிதாக கட்டப்பட்ட வீடுகளும், தற்போது கட்டப்பட்டு வரும் வீடுகளும் இடைவெளிகள் விட்டு அமைந்திருக்கின்றன. இந்த இடைவெளிகளை கருவேல முள் மரங்கள் ஆக்கிரமித்துள்ளதால் இரவு நேரங்களில் திருடர்களை துரத்தி சென்றாலும் பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. கடந்த திங்கள்கிழமை இரவில் பொதுப்பணி துறையில் ஒப்பந்ததாரராக பணியாற்றும் வானமாமலை என்பவர் வீட்டில் மர்ம நபர்கள் திருட முயற்சித்துள்ளனர்.
அதிகாலை 3 மணி என்பதால் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க, வானமாமலையின் மகன் 12ம் வகுப்பு தேர்வு எழுதி கொண்டிருப்பதால் அதிகாலையில் படிக்க எழுந்துள்ளார். அப்போது அவர்களது வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி மர்ம நபர் ஒருவர் உள்ளே குதிப்பதை பார்த்து திருடன் திருடன் என கத்தியுள்ளார். இதைக்கேட்டு கண்விழித்த அவரது தாயும், தந்தை வானமாலையும் துரத்திக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சுவர் ஏறி குதித்த மர்ம நபர்கள் அவனது உடன் வந்த நபருடன் சேர்ந்து ஓடிவிட்டதாக கூறுகின்றனர்.
இதே போல கடந்த டிசம்பர் மாத மழை வெள்ளத்தில், பாளையங்கோட்டையில் உள்ள அண்ணா நகரில் குடியிருந்த வீடு வெள்ளத்தில் சிக்கியதால், கிருபா நகருக்கு ரூ.5000 வாடகைக்கு தனது தாய் மட்டும் பாட்டியுடன் குடியேறியுள்ளார் ஐயப்பன் என்ற இளைஞர். புதிதாக வாடகைக்கு வந்த வீட்டில் குடியேறி நான்கு மாதம் ஆகிறது. இந்த நிலையில் தான் கடந்த 7-ஆம் தேதி நள்ளிரவு, ஐயப்பன் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருக்க வீட்டின் மெயின் கதவின் தாழ்ப்பாளை உடைத்து வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், ஐயப்பனின் தாய் கழுத்தில் இருந்து 3 பவுன் தங்க செயினை பறித்து சென்றுள்ளனர். அவரது பாட்டியின் கழுத்தில் இருந்த செயினையும் எடுத்து சென்றுள்ளனர். ஆனால் பாட்டியின் கழுத்தில் இருந்தது கவரிங் செயின். அம்மா சத்தம் போட ஐயப்பன் ஓடி வந்ததும் திருடர்கள் ஓடிவிட்டார்கள். உடனடியாக காவல்துறைக்கு ஐயப்பன் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பகுதி முழுக்க சோதனையிட்டு உள்ளனர். காவல்துறையின் கையில் அவர்கள் சிக்கவில்லை.. இதே போல மற்றொரு வீட்டிலும் திருட முயற்சித்துள்ளனர். இதன் காரணமாக கிருபா நகர் பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இரவு நேரங்களில் மேலாடை இன்றி கால் சட்டை மட்டும் அணிந்து, முகத்தில் மப்ளர், கையில் கம்புடன் திரியும் திருடர்களை காவல்துறை கைது செய்யும் வரை இரவு நேர தூக்கம் என்பது வாய்ப்பில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர் கிருபா நகர் மக்கள். எனவே காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)