மயிலாடுதுறை: பச்சிளம் குழந்தையை குளத்தில் வீசி சென்ற அவலம்! சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை!
மயிலாடுதுறை அருகே பிறந்து சில மணிநேரமே ஆன ஆண் குழந்தையை குளத்தில் வீசி சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மல்லியம் ரயிலடி தெருவில் உள்ள குளத்தில் பிறந்த ஒரு சில மணிநேரமான ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று சடலம் கிடந்ததுள்ளது. குளத்திற்கு குளிக்க சென்ற அப்பகுதி மக்கள் குளத்தில் குழந்தை ஒன்று இறந்து மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அப்பகுதி மக்கள் குழந்தை குளத்தில் கிடப்பது குறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் குத்தாலம் காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளார். தகவலை அடுத்து மல்லியம் ரயிலடி தெருவிற்கு விரைந்த குத்தாலம் காவல்துறையினர், குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். மேலும் அடையாளம் தெரியாத அந்த பச்சிளம் குழந்தையின் பெற்றோர் யார்? எதற்காக குளத்தில் வீசி சென்றார்கள்? எப்படி இறந்தது! என்பது குறித்து குத்தாலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். பச்சிளம் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது தொடர்பாக சமுக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், இதுபோன்ற சம்பவங்களை நடப்பதை தடுக்க, கருவுற்று இருக்கும் பெண்களுக்கு, அரசு செவிலியர்கள் ஊட்டச்சத்து வழங்குவது, தொடர் சிகிச்சைக்கு அறிவுறுத்துவது என, தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அரசு, தனியார் மருத்துவமனைகளில், குழந்தை பெற்ற பெண்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. வீடுகளில் குழந்தை பேறு நடந்தாலும், அரசு செவிலியர்களுக்கு தெரிந்து விடும். அவர்கள் உதவியுடன், குளத்தில் வீசப்பட்ட குழந்தை மற்றும் அதன் தாய் பற்றிய விவரங்கள் கண்டறிந்து விடலாம் எனவும், இது போன்ற கொடூர செயல் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
தவறான வழிகளில் கருத்தரிக்கும் பல பெண்கள், அக்கருவை கலைக்க பல்வேறு வழிகளை கையாளுகின்றனர். கருக்கலைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்றாலும், அதனை சட்டத்துக்கு புறம்பாக பணத்திற்கு ஆசைப்பட்டு ஒரு சில மருத்துவர்களும், மருத்துவத்துறை சார்ந்த சிலரும் இதில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு சட்டத்துக்கு விரோதமாக கருக்கலைப்பு செய்யும் நபர்களை கண்டறிந்து அவ்வப்போது அவர்களை கைதுசெய்து வழக்குப்பதிவு சம்பவம் நடந்தேறி வருகிறது. ஒரு சில நேரங்களில் கருத்தரிப்பு செய்யமுடியாத சில பெண்கள் தவறான முறையில் பெற்றெடுத்த குழந்தையினை, வீதிகளிலும், குப்பைத் தொட்டிகளிலும், குளம்,குட்டைகளிலும் வீசி செல்லும் அவல நிலை இன்றளவும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுத்தாலும், குழந்தைகளை வீசிச் செல்லும் சம்பவம் தொடர்வதால் தமிழ்நாடு அரசு இதுகுறித்து தனி கவனம் செலுத்தி மேலும் இதுபோன்று நடைபெறாத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.