Crime: சேர்ந்து வாழ மறுத்த காதல் மனைவி; வெட்டிக்கொன்ற கணவன் - நெல்லையில் பயங்கரம்
காதல் மனைவியை கணவனே வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் டி.குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு ராஜா. இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவருக்கும் நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியை சேர்ந்த சங்கரம்மாள் என்ற அபிராமிக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில் தற்போது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மதுரையில் வசித்து வந்த நிலையில் பிரபு தினசரி வீட்டிற்கு குடித்துவிட்டு வந்து பிரச்சனை செய்வதும், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை விற்பனை செய்து மது அருந்துவதுமாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சங்கரம்மாள் என்ற அபிராமியின் சகோதரர் பிரபு சுத்தமல்லி சத்யா நகர் பகுதியில் தனது வீட்டிற்கு அருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்துள்ளார். இந்த நிலையில் அபிராமி நெல்லை டவுன் பகுதியில் உள்ள நகைக்கடையில் வேலைக்கு சேர்ந்து அங்கு வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால் அபிராமி வேலை செய்த நகைக்கடைக்கும் அவ்வப்போது சென்று கடந்த சில நாட்களாக பிரபு ராஜா தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து பிரச்சினைகளை முடித்துவிட்டு வேலைக்கு வந்தால் போதும் என கடை உரிமையாளர் சொன்னதாக தெரிகிறது. இந்த நிலையில் சத்யா நகர் பகுதியில் உள்ள வீட்டில் இருந்த அபிராமியை அங்கு வந்த பிரபு ராஜா தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்துள்ளார். இதற்கு அபிராமி மறுப்பு தெரிவித்தாக தெரிகிறது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது.
அப்போது பிரபு தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அபிராமியை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். வெளியே சென்ற குழந்தைகள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது தாய் இரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அருகில் இருந்த அபிராமியின் சகோதரர் வீட்டிற்கு சென்று தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்கள் வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் அபிராமி சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் சுத்தமல்லி போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்ததுடன் தப்பியோடிய பிரபு ராஜாவையும் தீவிரமாக தேடி கைது செய்தனர். காதல் மனைவியை கணவனே வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..