(Source: ECI/ABP News/ABP Majha)
மின்சாரம் தாக்கி உயிரிழந்த கல்லூரி மாணவர் - மின்வாரியத்தின் அலட்சியம் காரணமா..?
பாலமூர்த்தியின் உடலை பார்த்த பெற்றோர் கதறி அழுத காட்சி காண்போரை கலங்கச் செய்தது.
நெல்லை பாளையங்கோட்டையை அடுத்த சமாதானபுரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் குடும்பத்துடன் அந்தப் பகுதியில் உள்ள ஒருவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். நடராஜனின் மகன் பாலமூர்த்தி (வயது 20). இவர் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் பாலமூர்த்தி இன்று காலை தனது வீட்டின் மாடி சுவரில் துணி காய போட சென்றுள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனே சென்று பார்த்த போது அவர் மின்சாரம் தக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். குறிப்பாக மழைக்காலம் என்பதால் அங்கிருந்த உயர்மின்னழுத்த வயர் சுவரில் தொட்டபடி மிகத் தாழ்வாக சென்ற நிலையில் மழையின் ஈரப்பதம் சுவரின் மீது இருந்த காரணத்தால் சுவரில் மின்சாரம் பாய்ந்து சென்றுள்ளது. இதனை கவனிக்காத பாலமூர்த்தி சுவரை தொட்டதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர் உயிரிழந்த பாலமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாலமூர்த்தியின் உடலை பார்த்த பெற்றோர் கதறி அழுத காட்சி காண்போரை கலங்கச் செய்தது. இதற்கிடையில் மின்வாரியம் மற்றும் மாநகராட்சியின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நடைபெற்றதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். குடியிருப்பு பகுதியில் தாழ்வாக செல்லும் மின்வயர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் அப்படியே விட்டு வைத்திருப்பதால் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே இனியாவது மின்வாரிய அதிகாரிகள் விழித்துக் கொண்டு குடியிருப்பு பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் வயர்களை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்